Archive for March, 2006

பருவமே புதிய பாடல் பாடு

March 30, 2006

Image hosting by TinyPicImage hosting by TinyPic
1981-இல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் பார்க்கவில்லை. ஆனாலும் இந்தப் பாட்டை ஒளியும் ஒலியும்-இல் பார்த்ததுண்டு. காலை நேர ஓட்டப்பயிற்சி செய்யும் சுகாசினியும் மோகனும். சுகாசினி அறிமுகம். இளையராஜாவின் இசை. பாலுவும் ஜானகியும் பாடியிருக்கிறார்கள். சுற்றிலும் பச்சையாக இருக்க ஓடிக் கொண்டேயிருப்பார்கள். இப்போது எல்லாவற்றிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்திருக்கும். ஓடுவதை விடுங்கள். கொஞ்ச நாளில் மக்கள் நடப்பதற்கே இடம் இல்லாது போய்விடும் போலிருக்கிறது. சென்னை நகரத்தில் நின்றாலே போதும் கூட்டமே நம்மைத் தள்ளிக்கொண்டு போகும்.

சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடிய பாலு பாடல் பூராவும் வரும் காலடிச் சத்தத்தை எப்படி ஏற்படுத்தினார்கள் என்பதை தொடையைத் தட்டி அப்படியே செய்து காண்பித்தார். இக்கால நவீன தொழில்நுட்பங்கள் அப்போது இல்லாததால் பாடல் பதிவு செய்து முடிக்கும் வரை தொடையைத் தட்டிக்கொண்டேயிருந்து வீங்கிப் போய் வலியெடுக்க ஆரம்பித்துவிட்டதாம். இப்போது குழு என்ற ஒன்றே அரிதாகி அவரவர் இடத்தில் அவரவர் இசையை அல்லது குரலை மட்டும் ஒலிப்பதிவு செய்து இணைத்துக் கொள்ளும் தொழில்நுட்பம் வந்துவிட்டதால் எல்லாமே சுலபமாகிவிட்டது என்றார். ஆனாலும் Music has become like plastic – அந்த ஆதமார்த்தமான உணர்வு இக்காலப் பாடல்களில் இல்லை – என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் பாடல் உறுத்தாத இசையுடன் இனிமையாக ஒலிக்கிறது.

பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாய் ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே புதிய பாடல் பாடு

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அழைக்கிறான் ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு


Advertisements

Ugadi Subhakaankshalu!

March 30, 2006
அனைத்து தெலுங்கு சகோதர சகோதரிகளுக்கும் மனங்கனிந்த இனிய தெலுங்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

TAARANA NAMA SAMVATSARAM

நானென்ன கள்ளா, பாலா? நீ சொல்லு நந்தலாலா!

March 29, 2006

சிம்லா ஸ்பெஷல் (1982) ஒரு வெள்ளித் திரை நாடகம். Y.G. மகேந்திரன், S.Ve. சேகர், மனோரமா, Sriப்ரியா மற்றும் நாடகக் குழுவினோரோடு நட்பு, பாசம் போன்ற செண்ட்டியெல்லாம் கலந்து கட்டி முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த படம்.

நிறைய நகைச்சுவைக் காட்சிகளும், அறுவை ஜோக்குகளும் விரவியிருக்கும் படம். “திடீர்” நாடக நடிகையாக மாறும் Sriப்ரியாவுக்கு வசனம் சொல்லித் தந்து மண்டை காயும் காட்சி – “சேரா மன்னா” அவர் முழங்குவதும் கலகல. கமலின் அபாரமான டைமிங் – குறிப்பாக நகைச்சுவை வசனங்களைப் பேசுவதில் – நன்றாக வெளிப்பட்டிருக்கும் படம்.

குளுகுளு சிம்லாவுக்குச் சென்று நன்றாக லூட்டியடித்திருப்பார்கள். பிறகு அம்மாவுக்கு சீரியஸ் என்ற தந்தியைக் கமலிடம் காட்டாமல் – காட்டினால் நாடகம் நின்றுபோய் நஷ்டம் ஏற்படும் – தங்கையின் திருமணம் நடக்காது என்பதால் – ஒளித்து வைக்கும் சேகரின் துரோகத்தைக் கண்டு பொங்கி மனம் வெதும்பி ஆற்றாமையுடன் கிளம்பும் அவசரத்தில் மேடையில் வந்து வண்ண ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் ஆடும் கமல் பாடும் பாட்டு மெல்லிசை மன்னரின் இசையில் பாலு அருமையாகப் பாடியிருக்கம் “உனக்கென்ன மேலே நின்றாய்” என்ற இந்தப் பாடல். பிரபு தேவா வந்ததற்குப் பிறகு மற்ற நடிகர்களின் நடனங்களுக்கு மவுசு போய்விட்டது. இப்போதைக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருப்பவர் வி்ஜய் மட்டுமே. ஆனாலும் நளினம் என்றால் கமல் நடனம்தான். பிரபு தேவாவால் சலங்கை ஒலி செய்யமுடியாது. There is no comparison anyway. நிற்க.

பாடல் முடியும் போது ஊரிலிருந்து எல்லாம் சுகம் என்று செய்தி வர, குற்றவுணர்வில் தவித்துக்கொண்டிருக்கும் சேகர் மகிழ்ந்து கமலிடம் சொல்வதற்காக அவசர அவசரமாக வர, நிகழ்ச்சி முடிந்துதும் திரை வேகமாக சேகரின் தலையில் இறங்கி, பிறகு மன்னிப்பு மற்றும் இத்யாதி வசனங்களுடன் சுபம் போடுவார்கள். இந்தப் பாட்டைத் தவிர நினைவுகளில் பெரிதாக எதுவும் மிச்சமில்லை என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

எல்லாப் பள்ளி ஆண்டுவிழாக்களிலும் யாராவது பையன்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடுவான்.

டிஸ்கோ நடன மோகம் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. பின்பு சலங்கை ஒலி வந்தபோது மாணவிகள் “ஓம் நமச்சிவாய”வையும் மாணவர்கள் “தகிட ததுமி” அல்லது “நாத விநோங்களை”யும் ஆண்டுவிழாக்களில் ஆடிக் கொண்டிருந்தார்கள். “பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்” என்பதற்கு ஷைலஜா மாதிரியே பாவம் காட்டி ஆடினார்களா என்று நினைவிலில்லை. சலங்கை ஒலியைப் பற்றிப் பேச ஏராளமாக இருக்கிறது. பின்வரும் பதிவுகளில் பேசிக் கொள்ளலாம். இப்போது சிம்லா ஸ்பெஷலுக்கு வருவோம்.

டிஸ்கோ பாடலாக இருந்தாலும் மிருதங்கம் ஆளுமை செய்திருக்கும் பாடல்.

வாலியின் அர்த்தம் பொதிந்த இனிய வரிகளில் பாலு அட்டகாசமாகப் பாடியிருக்கும் உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் இதோ!

1……2……..3……..4……….

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் த
தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மே…….டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆ…டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்…டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மே….லே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மே….லே நின்றா……ய் ஓ…… நந்த….லா…….லா………..
நிவேதா!

March 29, 2006


இந்த மாதிரி பாடல்கள் மட்டும் என்றால் பாடலாசிரியர்களே சினிமாவுக்குத் தேவையில்லாது போய்விடும். 🙂 🙂

ஒரு படம் வெற்றிபெற்றதும் அதே போலவே பத்து படங்கள் வரிசையாக வந்து வரிசையாக மண்ணைக் கவ்வும். அல்லது வெற்றி பெற்ற நடிகர்களை வைத்து ஒரு “அட்டு” படத்தை எடுத்துக் கவிழ்ப்பார்கள். இது சினிமாவுலகின் மாற்றமுடியாத விதி போல. ஆனாலும் இம்மாதிரிப் படங்களிலும் கலைஞர்கள் வஞ்சனையின்றித் திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். வசந்த்தின் “நீ பாதி நான் பாதி” (1991) படம் “கேளடி கண்மணி” பட வெற்றியின் பாதிப்பில் எடுக்கப்பட்டதோ என்று தோன்றவைக்கும் படம். ரகுமான் கெளதமியோடு “கமர்ஷியலுக்காகச்” சேர்க்கப்பட்ட ஹீரா மற்றும் வழக்கமான அம்மா அப்பா துணை நடிகர்கள். ஊட்டி போன்ற (அல்லது அதேவா?) இடங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் படபிடிப்பு. இசைக்கு மரகதமணி. ஆனாலும் இவையெல்லாம் வெற்றிக்குப் போதவில்லை!

படத்தில் சில பாடல்கள். ஹீராவும் ரகுமானும் எதிரெதிரே வந்து அடிக்கடி மோதிக் கொள்ளும் பாடல் ஒன்று – அதாவது பாட்டை யாரும் கேட்க மாட்டார்கள்.

சேற்றில் முளைத்த (யப்பாடி… இப்போதுதான் தமிழில் எழுதும் திருப்தி கிடைக்கிறது!) செந்தாமரை போன்று ஒரு அழகான பாடல்.

பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!. ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு “நிவேதா” என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு – சான்ஸே இல்லை 🙂

இம்மாதிரிப் பாடல்களைக் கேட்கவைக்க வேண்டுமென்றால் குரலில் தேனொழுக வேண்டும். “பிடி பாலுவை” என்று பிடித்துக்கொண்டு வந்து மரகதமணி பாட வைத்திருப்பார் போல. மனுஷர் ‘பாட வேண்டுமே’ என்றா பாடுவார்?. வெளுத்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். மரகதமணியும் பாலுவும் சேர்ந்து கொண்டு நமக்கு விளையாட்டு காட்டியிருக்கிறார்கள். ஆ… இன்னொரு முக்கிய ஆளும் விளையாட்டுக் காட்டியிருக்கிறார் – அவர் ஒளிப்பதிவாளர். ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். சில நொடிகளே நீடிக்கும் ஏகப்பட்ட “கட் ஷாட்”கள். அழகான விளம்பரப் படம் போல வர்ணமயமாக பலவித உடைகளில் ரகுமானும் கெளதமியும் வருவார்கள் – இயல்பான செய்கைகளுடன்.

ஸ்வரங்களை அழகாகப் பாடியது போதாதென்று “நிவேதா”வைக் குழைத்துக் குழைத்து பாலு பாடியிருக்கிறார் பாருங்கள். இந்த மாதிரியெல்லாம் எனக்குப் பாடத் தெரிந்தால் வீட்டில் சப்பாத்திக் கட்டையெல்லாம் பறக்க விடுவேனா?

இனி பாடல். (ஐயா சாமி. நான் சங்கீதக்காரன் இல்லை. ஆதலால் ஸ்வரங்களில் தவறு இருந்தால் குறிப்பிடவும். உடனே திருத்திவிடுகிறேன்).

ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ

ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா

ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ
ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ

நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா
நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா

நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா
நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா

காரிஸ ரிரிரி ரிஸநி ததத (உ) தாபம ககக
ஸரிகதபா ரிஸரிக ஸா காரிஸரிதப மபக நிவேதா

ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ
ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா
நி வே தா………துள்ளித் திரிந்ததொரு காலம்

March 28, 2006


என்றும் அன்புடன் படத்தில் பாலு பாடியிருக்கும் இந்தத் தனிப்பாடல் மிகவும் இனிய பாடல். இதில் முரளி கல்லூரி மாணவனாக வரவில்லை என்று நினைக்கிறேன். 🙂

இளையராஜாவின் இசையும் மிகவும் இனிமையாக இருக்கும்.

அசத்தலான ஆரம்ப ஆலாபனையுடன் சட்டென்று ஆரம்பித்துத் தவழும் பாடல். “நட்பின்” நடத்தைகள் சிலநாள் என்ற வரியில் “நட்பின்” என்ற வார்த்தையை பாலு அவருக்கேயுரித்தான நமுட்டுச் சிரிப்புடன் பாடித் தொடர்வார். பாடல் வரிகள் எளிமையான வரிகள். கல்யாண மாலை போன்று சற்றே தத்துவமான வரிகள்.

சரணத்தின் இறுதி வரிகளான “ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே”வைக் கேட்கும்போது சற்றே “திக்”கென்று ஒரு உணர்வு சூழ்கிறது.

Do it NOW before it becomes too late – in LIFE என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பாடல்.

ஆஆஆஆஆஆஆ

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்

காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தைத் தேடுது பூங்கொடியே பூங்கொடியே

(துள்ளித்)

அன்னை மடிதனில் சிலநாள்
அதை வி..

அன்னை மடிதனில் சிலநாள்
அதை விடுத்தொரு சிலநாள்

திண்ணை வெளியினில் சிலநாள்
உண்ண வழியின்றிச் சிலநாள்
நட்பின் அரட்டைகள் சிலநாள்
நம்பித் திரிந்ததும் பலநாள்

கானல் நீரினில் சிலநாள்
கடல் நடுவிலும் சிலநாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்

ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே

(துள்ளித்)

துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினைச் சுமந்தேன்
வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தேன்
வானம் எல்லையென நடந்தேன்

காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறியென வளைந்தேன்

உன்னை நினைத்திங்குச் சிரித்தேன்
உண்மைக் கதைதனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றித் தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே

(துள்ளித்)


வளையோசை கலகலகலவென

March 27, 2006


முன் குறிப்பு:-


எவ்வளவோ முயற்சித்தும் பாடலில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் படத்தைப் பற்றியும் நிறைய எழுதியதால் நீளமான பதிவாகிவிட்டது. கமல் ரசிகனாயிருப்பதில் உள்ள சிரமங்களில் இதுவும் ஒன்று! 🙂 பொறுத்தருள்க!

1988-இல் வந்து அதிரடியாகக் கலக்கிய படம் சத்யா. சரியாகச் சொல்வதானால் 1988 ஜனவரி-28 இல். அது கமலின் மகள் ஸ்ருதியின் பிறந்த நாள் என்று நினைக்கிறேன். தமிழ்ச் சினிமாக்களில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய நாயகன் வந்து இரண்டே மாதங்கள் கழித்து சத்யா வந்தது. கமல் நாயகனுக்கு அடித்த மொட்டைத் தலையில் கொஞ்சமே முடி வளர்ந்த தலையோடு எடுத்த படம். அதோடு ஒரு “வேலையில்லாப் பட்டதாரியின்” தாடியைச் சேர்த்துக்கொண்டு – பல்வேறு சிகையலங்காரங்களும், முக அலங்காரங்களும் இவருக்குப் பொருந்துகிற மாதிரி வேறு எந்த நடிகருக்கும் பொருந்துவதாகத் தெரியவில்லை – கமலின் முழு ஆக்கிரமிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இளையராஜா அடக்கி ஆனால் அருமையாக “வாசித்த” இசையுடன், நாஸர், மணிரத்னத்தின் நண்பர் கிட்டி, வடிவுக்கரசி, ராஜேஷ், டெல்லி கணேஷ், அந்த இரட்டைச் சகோதரிகள் – எல்லாவற்றுக்கும் மேலாக கமலின் தந்தையாக வந்து மனதை அள்ளிக்கொண்டு போன பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் – மறைந்த திரு. பகதூர் என்று எல்லாருமே அசத்தியிருந்தார்கள்.


தனிப்பட்ட முறையில் என் தேவதை அமலாவும் மனதை அள்ளிக்கொண்டு போயிருப்பார்.

அர்ஜூன் படத்தைத் தழுவி தமிழில் வந்த படம் சத்யா (“கமல் சொந்தமாக எந்தப் படத்தையும் தரவில்லை. எல்லாமே காப்பி” என்று எகிறும் ஆத்மாக்களே – Point taken. Let Kamal make or copy – as long as he continues and contributes what he’s been doing all along – I’m fine with that; and I’ll continue to be his crazy fan!). பின்னாளில் கோவிந்த் நிஹ்லானியின் துரோகால்-ஐ இங்கே தமிழில் குருதிப் புனலாக ஓட விட்டார்.

நாம்தான் தொப்புள் குலுக்கலும் ரெட்டை அர்த்த பாடல்களும் இல்லாவிட்டால் சும்மா விடமாட்டோமே.. குருதிப்புனல் ஹே ராம் அன்பே சிவமெல்லாம் எப்படி ஓடலாம் என்று தியேட்டரை விட்டு விரட்டிய புண்யாத்மாக்களல்லவா நாமெல்லாம்! ஹூம்… கமல் நமக்குத் தந்திருப்பதற்கு, நாம் “நிறையவே” அவருக்குக் கொடுத்திருக்கிறோம். நமக்கெல்லாம் “பொன் மேனி உருக” வேண்டும். இல்லாவிட்டால் “நேத்து ராத்திரி யம்மா” என்று முக்க வேண்டும். இல்லா விட்டால் டிக்கெட் வாங்கக் கொடுத்த காசு செரிக்காதே!

இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் “ஆஹா ஓஹோ” என்று அள்ளியள்ளி மதிப்பெண் அளிக்கப்படும் படங்களையும், டாப் டென்னில் வரும் படங்களையும் பார்க்கும் போது, அப்போது விமர்சனமெழுதியவர்களெல்லாம் பூமிக்குள் தங்களைப் புதைத்துக்கொண்டு விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தராதரமும் மதிப்பீடுகளும் எந்த அளவிற்குக் குறைந்து போயிற்று என்பதும் தெரிகிறது.

சத்யாவில் அனந்துவின் வசனங்கள்! யம்மாடி… முகத்திலறைவது என்பார்களே… முகத்தில் பலமுறை சத்யாவின் வசனங்கள் அறைந்தன. எனக்கு எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியவில்லை.

நண்பன் கொல்லப்பட்டதும் துடித்துப் போய் கொலையைப் பார்த்தவர்களைச் சாட்சி சொல்லக் கூப்பிடும்போது அவரவர் நழுவ, அதை நம்பமுடியாமல், அதிர்ச்சியும் ஆத்திரமுமாய் ஆங்காரமாகப் பொங்கும் கமல் பேசும் வசனங்கள்….

“கதை க்தையா சொல்வீங்களே… யானை வந்து சாட்சி சொல்லிச்சு… ம்ம்ம்ம்ம் (மயிறு என்று சொல்ல வந்து விழுங்கியதுபோல இழுத்து) மரம் வந்து சாட்சி சொல்லிச்சுன்னு…இப்ப யாராவது வந்து சாட்சி சொல்லுங்களேன்?”

இப்போது கும்பல் முழுவதும் காலியாகி ஒன்றிரண்டு பேர் மட்டும் நிற்க, வெறுப்புடனும் ஆற்றாமையுடனும் கமல் சொல்வார்…

“போய் கட்டிலுக்கடியில ஒளிஞ்சுக்க.. இல்லைன்னா உண்மை வந்து கடிச்சுரும்”

கடைசி ஆளிடம் “போ… போடா”…

அந்தக் காட்சியைப் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் குற்றவுணர்ச்சி எழுகிறது.

அந்த இளைஞனின் ஆக்ரோஷமும், அநீதியைக் கண்டு பொங்கும் ரெளத்திரத்தையும், ஒவ்வொரு இளைஞனிடமும் பார்க்க வேண்டுமல்லவா? அதில் கொஞ்சமாவது நமது மனதில் இருந்திருக்குமல்லவா? வெளிக்காட்ட பயந்து நமக்குள்ளே அமுக்கி வைத்துக்கொண்டு அமுக்குளி மாதிரி உலவிக் கொண்டிருப்பதை நினைத்தால் அவமான உணர்ச்சி எழுகிறது.

சித்தியாக வரும் வடிவுக்கரசியின் நடிப்பு அபாரம். அசத்தலாகச் செய்திருந்தார். பார்க்கும் நமக்கே வெறுப்பு மண்டுகிறது.

இளைஞர்களை அரசியல்வாதிகள் பலிகடா ஆக்குவதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய படம் சத்யா. சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் அரசியல்வாதியாக கிட்டி மின்னியிருந்தார். இவருக்குக் குரல் கொடுத்தது பாலு என்பது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கமலும் அமலாவும் வரும் காட்சிகளெல்லாமே இனிய தென்றலாக வருடிச் செல்லும் காட்சிகள்தான். வழிப்பறித் திருடன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடும் அறிமுகக் காட்சியிலிருந்து நண்பர்கள் “அண்ணி” என்று அழைத்துக் கமலைக் கிண்டல் செய்ய, ஏகக் களேபரமான ஆனால் ஜாலியான காட்சிகள். நிறையக் காட்சிகளில் மெலிதான நகைச்சுவை சுகமாக இருக்கும்.

அமலாவிடம் சங்கிலியைத் திருப்பிக் கொடுப்பதற்காக வரும் கமல் அந்த வீட்டுக் கதவைத் தட்டி, கதவைத் திறந்த ஆளிடம் “செவப்பா கொஞ்சம் புஷ்டியா ஒரு பொண்ணு” என்று இழுக்க, வெளியே வரும் பூதாகரப் பெண்மணியைப் பார்த்துத் திடுக்கிட்டு “இவ்ளோ புஷ்டியா இல்..” என்று உளறத் தொடங்கி திருத்திக்கொண்டு “இவங்க இல்லை” என்று கிளம்பும் காட்சி.

அமலாவும் அவர் வேலை பார்க்கும் கடை முதலாளி சேச்சியும் “என்ட குருவாயூரப்பா” என்று ஐக்கியமாகிவிட,சேச்சி வீட்டில் அவர்கள் உணவருந்துகையில் கமலையும் அழைத்திருப்பார்கள். அப்பெண்மணியும் அமலாவும் மலையாளத்தில் – “காதல் எல்லாம் சரிதான். ஆனாலும் இந்த ஆளிடம் கவனமாவே இருந்துக்கோ” – என்பது போலச் சம்சாரித்துக்கொள்ள, கொஞ்ச நேரம் மெளனமாக இருக்கும் கமல் இடை புகுந்து மலையாளத்தில் சரளமாக உரையாட, புரையேறி இருமும் அமலாவும் க்ளீன் போல்டான சேச்சியும் – 🙂 🙂 இதையே குமுதத்திலோ விகடனிலோ விமர்சனத்தில் “இரண்டு மலையாளிகள் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை நமக்கு உறைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்! நாம்தான் மறத் தங்கிலீஷ் தமிழர்களாயிற்றே!

கமலும் அமலாவும் வனவாசம் போன ராமன் சீதை போன்று காவியுடையில் இருக்க (கொள்ளை அழகு! கொள்ளை அழகு!) நண்பர்கள் பொருத்தமான வேடங்களில் (அனுமான் birthday boy) சூழ்ந்திருக்க, ராமன் கமல் சீதை அமலாவிடம் “ஜானகி டீ சாப்பிடு” என்பதும், அமலாவின் கூந்தல் வில்லில் சிக்க “ஆ…” என்று அலறுவதும் ஒரு வடையை நால்வர் பங்குபோடுவதும் என்று இனிமையான காட்சிகள்.

தீவிர யோசனையுடன் கேரம் போர்டில் தனியாக விளையாடும் கமல் ஸ்ட்ரைக்கரைச் சுண்டியதும் காட்சி ஸ்ட்ரைக்கர் அடித்துச் செல்லும் பக்கங்களின் கோணத்திலிருந்து டக் டக்கென்று மாற்றிக் காட்டப் படுவது – காமிரா விளையாடியிருக்கும். இதே போல அடைமழை பெய்ய, நூற்றுக்கணக்கில் குடைகளுடன் மக்கள் திரையரங்கை விட்டு வெளியே வர, அதனூடே கமலின் நண்பனைத் துரத்திச் சென்று ரவுடிகள் வெட்டிச் சாய்க்கும் காட்சி அப்படியே நம்மை உறைய வைத்துவிடும்!

சண்டைக் காட்சிகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்த படம் சத்யா. ரேஷன் வரிசையில் நிற்கையில், ரவுடி ஆட்கள் வந்து பஜ்ஜி போடும் இளைஞனை மாமூல் தராததற்காக அடித்து எண்ணையில் முக்க, வரிசையில் நிற்கும் கமல் ஆத்திரமடைந்து – அவரது மீசை தாடியை திரை முழுக்கக் காட்ட, கீழுதட்டை மடித்து கடிக்க அதோடு கடிபடும் முடிகள் ஒவ்வொன்றாக விடுபடுவதையும் காட்டும் காமிரா – ஓடிவந்து அவர்களைப் பந்தாடும் சண்டைக் காட்சியாகட்டும். கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் கட்டிடத்தில் ஆஸ்தான சண்டையாளர் அழகுவுடன் (சத்யாவின் கெட்-அப் அழகுவின் இன்ஸ்பிரேஷன் என்று நினைக்கிறேன்) அவர் போடும் சண்டையாகட்டும் – பொறி பறக்கும் சண்டை என்பதற்கு உதாரணச் சண்டைகள் நிறையவே. சிறு கீறல் கூடப் படாமல் நூறு பேரைப் பந்தாடும் நாயகர்கள் மத்தியில் கமல் நிறையவே அடிபடுவார் (குருதிப் புனல்!). இதிலும் கிட்டியின் குண்டர்கள் அவரை அடித்துத் துவைத்து – இந்தப் பக்கம் மேடையில் இளைஞர்களைப் பற்றித் தேனொழுக கிட்டிப் பேச – கம்பி வேலியில் கமலை எறிந்துவிட்டுப் போவார்கள். அவர் முகத்தின் குறுக்காக கம்பி வேலி அழுத்திக்கொண்டிருக்கும்!

அதுவரை பார்த்துச் சலித்துப் போயிருக்கும் “இஜுகை.. இஜுகை… டம் டம்… டிஷ்யூம் டிஷ்யூம்” போன்ற எரிச்சல் சண்டைச் சத்தங்கள் இல்லாது, நிஜச் சண்டைக்குக் கிட்டத்தில் வந்த சண்டைக் காட்சிகள் சத்யாவில். இன்னும் ரொம்பக் கிட்டத்தில் வந்தது பேசும் படம் தெருச்சண்டையின்போது கதாநாயகன் கமல் ஓரமாக அவசர அவசரமாக “நமெக்கென்ன” என்று விலகிச் செல்வது! 🙂 🙂

“ஏழை தினம்தினம் சிரிக்கணும்
ஒரு பிடி சோறு, அவனுக்குக் கிடைக்கணும் கிடைக்கணும்
மாயும் விலகணும்
அரசியல் சாயம் வெளுக்கணும் வெளுக்கணும்

மேடைப் பேச்சும் வார்த்தை வீச்சும் ஏன்?
தீமை எங்கே தேடித் தீர்ப்போம் வா!”

என்ன மாதிரி வரிகள். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு அனுதினமும் தீமைகளையே செய்துவரும் நபர்களைத் தீர்க்க இப்படி ஒரு தனிப்படை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்ற வைத்த படம். என்ன செய்வது! இந்தியன் தாத்தா வந்தாலும் தீர்க்க முடியாத புரையோடிப் போன புண்ணாக அல்லவா இருக்கிறது சமூகம்! மாற்றம் வரும் – வர வேண்டும் என்ற நம்பிக்கையை மட்டும் தக்கவைத்துக்கொண்டிருப்பது ஒன்றுதான் இப்போதைக்குச் செய்ய முடிவது. அதுவும் இல்லாவிட்டால், பிடித்துக்கொண்டு வாழ ஒன்றுமே இருக்காது!

இறுதிக் காட்சியில் வில்லனைக் கொன்று தீர்க்க, பின்னணிக் குரலில் இ.பி.கோ. 302-இன் படியான நீதிபதியின் தீர்ப்பு வாசிக்கப்பட கமலின் முகத்தில் ஒரு மந்தஹாஸ புன்னகை தவழ, படம் முடியும். இது மாதிரி பின்னணிக் குரலுடன் முடியும் தமிழ்ப் படங்கள் நிறைய வந்திருக்கின்றன. பாரதியின் வரிகள் பின்னணியில் ஒலிக்க “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்று ஒற்றைக் கையோடு மண்டியிட்டு நிற்பார் மஹாநதியின் இறுதிக் காட்சியில்.

சத்யாவைப் பார்த்து கையில் மாட்டிக்கொண்ட இரும்புவளையம் இன்னும் இருக்கிறது! கல்லூரியில் படித்த சமயம் அது. அவ்வப்போது எதிர் கோஷ்டிகளைத் தெருமுக்கில் சந்திக்க நேரும்போது வளையத்தைக் கழற்றி இறுகப் பிடித்துக்கொண்டதுண்டு. மற்றபடி அந்த முறுக்கல்கள் எல்லாம் பரபரவென்று திரியெரிந்து வெடிக்காது புஸ்வாணமாகுவது போல, புஸ்வாணச் சண்டைகளாகவே முடிந்தன. ஒருமுறை கூட வளையத்தைப் பயன்படுத்தும் சூழ்நிலை வரவில்லை. உண்மையிலேயே முகரையைப் பெயர்க்கக் கூடிய, தாடையை உடைக்கக் கூடிய ஆயுதம்தான் அது. ரொம்ப பெரிதாக இருந்தால் கழன்று விழுந்துவிடும். சிறிதாக இருந்தால் கழற்ற வளையல்கடைக் காரர் வரவேண்டியிருக்கும். அதற்குள் எதிராளி நம் தாடையைப் பெயர்த்துவிடும் அபாயமும் இருக்கிறது. இப்போது வெள்ளி, தாமிரம், தகரம் என்று கம்பி போலச் செய்து இதை அலங்காரப் பொருளாக்கி விட்டார்கள். நடுவில் டாலர் ஒன்றை ஒட்ட வைத்து “சாமி”யும் ஆகிவிட்டது!

அப்பாவி அப்பா வேலை செய்யும் பெயிண்ட் கடை முதலாளியை வூடு கட்டி பெயிண்டடிக்கும் காட்சியும், பின்பு வரும் அப்பாவை முதலாளி நாற்காலியில் அமர வைத்து விழுந்து விழுந்து கவனிக்கும் காட்சி நல்ல நகைச்சுவை.

சுடுகாட்டு முகவரியைக் கொடுத்து வேலைக்கான விண்ணப்ப பாரத்தை விற்றுக் காசாக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள். வரிசையில் நிற்கும் ஆட்டோக்காரர்கள் வர மறுப்பது, பல்லவனைத் துரத்தும் பயணம் – ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்கள்.

விட்டால் சத்யா படத்தைப் பற்றி விடியவிடியச் சொல்லிக் கொண்டேயிருப்பேன். நான் மிகவும் ரசித்த படம். வழக்கமாகச் சொல்வது போல இன்னும் சில வருடங்கள் கழித்து வந்திருக்க வேண்டிய படம்.

ஹூம்.. என்ன எடுத்து என்ன பயன். மகாநதியில் கிருஷ்ணஸ்வாமி சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

“ஒரு நல்லவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்குக் கிடைச்சுடுதே”!

முகத்திலறையும் உண்மை! சரி விடுங்கள். பாடலுக்கு வருவோம்.

மொத்தம் மூன்றே பாடல்கள். அதில் ஒன்று திருஷ்டிப் பாட்டு – நகரு நகரு வருது வருது தஞ்சாவூர்த் தேரு – என்ற தேவையேயில்லாத ஆபாசக் குத்தாட்டப் பாடல் – அதைத் தள்ளுபடி செய்துவிட்டால் மிஞ்சும் இரண்டு பாடல்களில் ஒன்று மேற்சொன்ன ‘போட்டா தெரியுது தெரியுது துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது” என்ற கமல் பாடிய அருமையான பாடல்.

இன்னொன்று முத்திலும் முத்தான அருமையிலும் அருமையான இதமான தென்றலான – இன்னும் நிறைய ‘ன’ போட்டுக் கொள்ளவும் – வளையோசை கலகலவென ஒலித்த பாடல். பாலுவும் லதா மங்கேஷ்கரும் பாடிய மெல்லிசைப் பாடல். இளையராஜாவின் ராஜாங்கத்தில் மின்னிய பாடல். ஆரம்ப மலர்ச்சியும், கீழ் ஸ்தாயி புல்லாங்குழலும் துவங்க, சிறிது சிறிதாகச் சூடு பிடித்துத் தென்றலாய் உள்ளத்தை வருடும் பாடல். சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடலாம்.

பாடல் படமாக்கப்பட்ட விதம் ஒரு அழகான கவிதையை வாசித்த திருப்தியை ஏற்படுத்துகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமைப் பின்னணியில், அதனினும் குளிர்ச்சியாக அமலாவும், கமலும்…

கமலின் தாடியப் பிடித்து இழுத்து பொய்யாக முகத்தில் குத்துவிட்டு, புஜ ‘பலத்தை’ அமலா கையை மடக்கிக் காட்ட, அந்த பஞ்சுக் கையைத் தொட்டுப் பார்த்து குனிந்து கமல் முத்தமிட மடக்கிய கையோடு கமலின் தலையின் செல்லமாகக் குட்டு வைக்கும் காட்சி, ‘லாலலாலலாலா லாலா’ என்று படகில் உட்கார்ந்தபடி பாடும் அமலாவின் தொண்டையைச் செல்லமாகக் கிள்ளும் காட்சி, எடை பார்க்கும் கருவியில் முதலில் தனித்தனியாக ஏறி, பின்பு சேர்ந்து ஏறி நிற்பது, விரல்களைக் குவித்து ஓட்டை வழியாக அமலாவைப் பார்க்கும் கமலும் அதைத் தொடரும் சிணுங்கல்களும்..

அந்தப் புல்வெளியில் ஓடித்திரிந்து அக்கம் பக்கம் பார்த்து யாருமில்லை என்று உறுதி செய்துகொண்டபின், கமலின் முகம் நோக்கி அமலா நிற்க, வீசும் காற்று சேலைத் தலைப்பால் அமலாவின் முகத்தை மூடிட, அதை விலக்க முயற்சி செய்யும்போது தடுத்துவிட்டு, அப்படியே சேலை மூடிய முகத்தைக் கைகளில் ஏந்தி ஒரு பில்டர் முத்தம் கொடுப்பார்.

தட்டானைப் பிடித்து – அதைப் பிடிக்க கமல் அடிக்கும் பல்ட்டி சாதாரணமாகத் தெரிந்தாலும், முயற்சித்தால் தெரியும் அதன் “அருமை” – அமலாவின் சேலைக்குள் விடுவது – படிக்க இது ஆபாசமாகத் தோன்றலாம் – ஆனால் பாடலைப் பாருங்கள் மக்களே!

பல்லவனில் படிக்கட்டுப் பயணம் செய்யும் கமலை உள்ளே வருமாறு அமலா கூப்பிடுவதும், அருகில் நெருங்கி நின்றுகொண்டு காதல்வயப்பட்டிருப்பதும், ஓட்டுனர் பிரேக் அடித்து நிறுத்தியதும் அந்த அதிர்ச்சியில் சாய்ந்து அமலாவின் கன்னத்தில் இச்சிடுவதும் கவிதை இல்லாமல் என்ன? பாடல் முடியும்போது படிக்கட்டில் இருவரும் சாய்ந்துகொண்டு பயணம் செய்வார்கள். முன்பக்க ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆளின் கையில் அந்தப் பெரிய HMT கைக்கடிகாரம் சூரிய ஒளி பட்டு மின்னும்! – Well… This movie has much more than I can chew…

பாலுவின் குரலைப் பற்றியும் இப்பாடலைப் பாடிய விதத்தைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. லதா என்று குறிப்பிட்டிருக்காவிட்டால், இது ஜானகி பாடியது என்று துண்டு போட்டுத் தாண்டியிருப்பேன். சரணம் ஆரம்பிக்குமுன் இசை துள்ளி விளையாடுகிறது. வழக்கமான முச்சந்தி நடனங்கள் இல்லாமல், இயல்பு வாழ்க்கைக் காதலர்களைக் காட்டியது இன்னும் சிறப்பு.

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை கலகலகலவென)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

(வளையோசை கலகலகலவென)

லாலலாலலாலா லாலா
லாலலாலலாலா லாலா ஹே
லாலலாலலாலா லாலலாலலாலா

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்

(வளையோசை கலகலகலவென)


அந்தி மழை பொழிகிறது

March 24, 2006

பாலுவை முதன்முதலாகத் திரையில் நான் பார்த்தது கமலின் நூறாவது படமான ராஜ பார்வை படத்தில் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் சில நொடிக் காட்சியில்தான்.

இளையராஜா, வைரமுத்து, பாலு என்ற மூவர் கூட்டணி கொடுத்த எத்தனையோ முத்துகளில் இந்தப் பாடலும் ஒன்று.

“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”

போன்ற வரிகளுக்குப் பொருள் கண்டுபிடித்து பட்டிமன்றங்களெல்லாம் நடந்த நினைவு.

ஆரம்பத்தில் சீரான தாளம்; அதோடு கோரஸ் என்று வியாபித்து ஒரு நொடி நிறுத்தி பாலு “அ(ஹ)ந்தி மழை” என்று துல்லியமாக ஆரம்பிப்பதை அவர் காதில் கேட்பான்களை மாட்டிக்கொண்டு ஒலிவாங்கி முன் நின்றுகொண்டு ஒலிபுகா கண்ணாடி அறைக்குள் நின்று கொண்டு இருக்கும் காட்சியோடு காட்டுவார்கள். வெளியில் வயலின்கள் கூட்டம். இளையராஜாவைக் காண்பித்தார்களா என்று நினைவில்லை.

கமலின் உணர்ச்சியற்ற நீலக் கண்களும், எல்லா உணர்ச்சிகளையும் கொட்டியிருக்கும் மாதவியின் பெரிய கண்களும் படத்தின் பல சிறப்பம்சங்களில் ஒன்று – நான்ஸீஈஈஈ என்று கமல் இறுதிக் காட்சியில் இரைவது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. தோட்டா தரணியின் கைவண்ணம் பார்வையற்ற கமல் வாழும் வீட்டில் தெரியும் (அதைக் கமல் பார்க்கமுடியாதே என்றும் தோன்றியது!). பேசும் படம்தான் சிங்கீதம் சீனிவாசராவ் கமலை வைத்து இயக்கிய முதல் படம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ராஜபார்வையிலேயே சேர்ந்திருக்கிறார்கள் என்று சமீபத்தில்தான் தெரிந்தது. ஒளிப்பதிவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஓவியம் உயிர் பெறும் வித்தையெல்லாம் அப்போதே இந்தப் படத்தில் செய்தார்கள்.

கமலுக்கு ஓவியமும் அது உயிர் பெறுவதும் பிடிக்கும் போல! விக்ரம் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் புறா உயிர் பெறும். அபூர்வ சகோதரர்களில் மெக்கானிக் ராஜாவின் படத்தை போலீஸ் ஜனகராஜ் வைத்துக்கொண்டு தேடுகையில் படம் ஜனகராஜைப் பார்த்து கேலி செய்து அழகு காட்ட, அப்படியே உயிர் பெற்று கமல் பாடி ஆடத் துவங்கிவிடுவார்.

எண்பதுகளில் இம்மாதிரிக் கதைகளெல்லாம் ரசிகர்களுக்கு அஜீரணத்தைத் தந்ததால் (ஆக இது அன்பே சிவத்திலோ ஹே ராமிலோ தொடங்கிய சங்கதி இல்லை) படம் வெற்றி பெறவில்லை.

பார்வையற்ற இசைக் கலைஞனாக வரும் கமல் நல்ல வேளை கண்களை மேலே செருகிக்கொண்டு இம்சை செய்யாமல் நீலக் கண்ணாடியை கண்ணுக்குள் வைத்துக்கொண்டு “உணர்ச்சியற்றதாகத்” தோன்றச் செய்தார். சும்மா வந்து போகாமல், பார்வையற்றவருக்குண்டான நடையுடை பாவனைகளை முடிந்த அளவு நன்றாகவே பிரதிபலித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை கமல் என்பதால் அவர் அசாத்தியமான விஷயங்கள் செய்யும்போதும் அவை சாதாரணமாக நமக்குத் தோன்றுகிறதோ? இப்படத்திற்காகவே வயலின் கற்றுக்கொண்டதாகப் படித்த நினைவு. இதே போல அன்பே சிவத்தில் சில நொடிகளே வரும் தெருக்கூத்துக் காட்சியில் தவில் வாசிக்கும் காட்சிக்காக தவில் வாசிப்பில் பயிற்சிப் பெற்றதாகக் கேள்விப்பட்டேன்.

இதையெல்லாம் பார்க்கும் போது பெரிய பியானோ முன்பு பட்டாம்பூச்சி டையுடன் வெள்ளைக் கோட் சூட்டை அணிந்துகொண்டு இறுகிய முகத்துடன் அமர்ந்துகொண்டு அவ்வளவு பெரிய கூட்டத்தில் நாயகிக்கு மட்டும் புரியும்படியான “மர்ம” பாடல்களைப் பாடிக்கொண்டே கதாநாயகன் விரல்களை பியானோ விசைகளின் மீது வைத்து சப்பாத்தி மாவு பிசைவதைப் பார்த்து எத்தனையோ முறை வெறுத்துப் போயிருக்கிறேன்.

செய்யும் தொழிலில் அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும் என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக்கொண்டிருக்கும், வெகுசில உதாரணக் கலைஞர்களில் கமலும் ஒருவர் என்று பெருமையுடன் ரசிகனாகச் சொல்வேன்.

தேவாலயத்தில் நடக்கும் இறுதிக் காட்சியில் “நான்ஸி அழறாடா?” என்று நண்பன் (ஒய்.ஜி.?) சொன்னதும் ஒரு நிமிடம் அதிர்ந்து, அடித்துப் பிடித்து படிகளில் இடித்துக்கொண்டு ஓடிவரும் காட்சி இன்னும் கண்ணிலேயே நிற்கின்றது. கடையில் இரு சக்கர வாகனத்தில் – Side Car இருந்ததா என்று நினைவில்லை – மூவரும் பறக்க, அப்படியே காட்சியை நிலைநிறுத்தி, பாரதிராஜா ஸ்டைலில் ஏதோ எழுத்து போட்டு முடிப்பார்கள்.

அப்போது எனக்கு பத்து வயது. ஆதலால் நினைவுகளில் ராஜ பார்வை மங்கியே இருக்கிறது.

மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அந்த வயதில் நான் தலையைச் சிலுப்பிக்கொண்டு சென்றுகொண்டிருந்ததால் இந்தப் படத்தையெல்லாம் ரசிக்கவில்லை – ஓசி என்பதால் போய் உட்கார்ந்து பார்த்த படம். ஆனாலும் சிறப்புகளை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து இப்போது ரசிக்க முடிகிறது. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பார்க்கவேண்டும்.

“அழகே அழகு” என்ற அழகான பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். “விழியோரத்து” பாடலை கமல் பாடியிருக்கிறார்.

முத்தாய்ப்பாக இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் “ஏக்கம்” என்ற ஒரே உணர்வைப் பாடல் முழுதும் தெளித்து நன்றாகப் பாடியிருக்கிறார்கள்.

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை)

தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை)

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

(அந்தி மழை)

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதுபூங்காற்று உன் பேர் சொல்ல

March 24, 2006


ஏஜெண்ட் XII என்று ஒரு காமிக்ஸ் கதையைச் சிறுவயதில் படித்திருக்கிறேன். அதில் வரும் நாயகன் ஒரு உளவாளி. ஏதோ விபத்தில் அடிபட்டு நினைவுகளைப் பறிகொடுத்து தான் யாரென்று கண்டுபிடிப்பதற்காக – “நான் நல்லவனா கெட்டவனா?” என்று அவனாகவே கேட்டுக்கொள்ளும் பாத்திரம் – மெனக்கெட்டு செய்யும் சாகசங்களே கதை. இதைப் படித்தது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால்! வெற்றி விழா (1989) பார்த்த போது இந்தக் கதை சட்டென்று நினைவுக்கு வந்தது. இப்போது கஜினியும், சில வருடங்களுக்கு முன்னால் வந்த ஜாக்கியின் Who Am I? யும் கிட்டத்தட்ட இதேபாணி ஹீரோக்களைக் கொண்டு வந்த படங்கள். வெற்றிவிழாவின் மூலம் Bourne Identity என்ற புத்தகம் (2002-இல் படமாகவும் வந்தது) என்று கேள்விப் பட்டேன். பிரதாப் போத்தன் இயக்கியது.


படத்தில் “கமர்ஷியலுக்காகத்” திணிக்கப்பட்ட பிரபு, குஷ்பு பாத்திரங்களையும் அதைத் தொடர்ந்த அபத்தக் காட்சிகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நன்றாக வந்திருக்க வேண்டிய படம். ஆனாலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு இல்லாமலா? என்ன செய்வது! மேலும் இந்த மாதிரிக் கதைகள் தமிழகத்தில் எடுபடாது என்றே நினைக்கிறேன். நினைவுகளை இழந்தவன் என்றால் “மெண்டல் படமா?” என்று “அசால்ட்டாகச்” சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். கடைசிக் காட்சியில் வில்லனில் வயிற்றுக்குள் குழாயைச் செருகி அதில் வழியாகப் புகைவருவதெல்லாம், கமாண்டோ படத்தின் இறுதிக்காட்சியின் மோசமான காப்பி! அதெல்லாம் தொலையட்டும்.

காக்கிச் சட்டையில் சத்யராஜ் செய்தது போல, இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் அருமையாகச் செய்திருப்பார். அதில் “தகடு தகடு”. இதில் “வெற்றி வேஏஏஏல்”..

சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல். கமலுக்கு இந்த வெற்றிவிழா வெற்றி வேல்.

மற்றபடி சரியான மசாலா படம். இருந்தாலும் அசத்திய காட்சிகள் இந்தப் படத்தில் நிறைய உண்டு.

கமலின் ஆரம்ப அறிமுகம் சரியான அதிரடிக் காட்சி. எதிரிகள் துரத்திக்கொண்டு வர சவுக்குத் தோப்புக்கு இடையிலும், கோவா கடற்கரையில் அவர் ஒடும் ஓட்டமும் அதைத் தொடர்ந்த சாகசக் காட்சிகளும் அப்போதைய தமிழ்ப் படங்களில் கண்டிராத புதுமை.

“அமலா” என்று எழுதும்போதே புல்லரிக்கிறது எனக்கு. இதற்கு மேல் எழுதவே கை ஓடவில்லை என்பதே உண்மை. என்னிலிருந்து என்னைப் பிரித்துக்கொண்டு ஒரு வலைப்பதிவனாக இதை மிகுந்த பிரயாசையுடன் எழுதுகிறேன். அப்படியும் மீறி இதில் அமலாவின் மீதான எனது அபார பிரேமை தெரிந்தால் அது என் குற்றமில்லை! மன்னிக்க. அந்தத் தேவதையைப் பற்றி நான் முன்பு எதுவும் எழுதியதில்லை. ஏனென்றால் அது எழுதி முடிகிற விஷயமில்லை என்பதால். இந்தப் படத்தில் தேவதை போன்று வந்து தேவதை போன்று மறைந்து போகிற – அனைத்துக் காட்சிகளும், கமலின் தவறிய நினைவுப் பகுதிகளிலிருந்து சிறு சிறு காட்சிகளாக வரும் திருமணக் காட்சியும், அதைத் தொடர்ந்த சம்சார சரசங்களும் எனது வர்ணனைக்கு மீறிய விஷயங்கள். காதல் என்றால் இந்த மாதிரி இருக்கவேண்டும் என்று ஏங்க வைத்த காட்சிகள். “மன்மத ராசா” என்று டங்குடக்கரவில் ஊறிப்போயிருக்கும் இக்கால ரசிகர் கூட்டம் – காதல் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதை இம்மாதிரி படங்களின் காட்சிகளிலிருந்து அறிந்துகொள்ள வேண்டும். “சத்யா” என்று குரல் கொடுக்கும் அவசரக் குடுக்கைகளே. பொறுங்கள். மறக்கவில்லை. பிந்தைய பதிவுகளில் சத்யா வரும்! பூ ஒன்று புடவையில் வந்தது போல தேவதை இப்படத்தில் வந்திருக்கிறார். கீதாஞ்சலி பதிவில் “நாகார்ஜூன் என் நிரந்தர எதிரி” என்று ஏன் குறிப்பிட்டேன் என்று இப்போது புரிந்திருக்கும். ஹூம். கமல் அமலா வரும் காட்சிகள் கவிதைகள். அய்யய்யோ இது பாலு பற்றிய பதிவு. இருங்கள் அதற்கு வருகிறேன்.

இந்தப் பாடலும் அது படமாக்கப் பட்ட விதமும் ஒரு பெரிய கவிதை! பல காட்சிகள் அசத்தலாக இருக்கும். பச்சைப் புல்வெளியில் காற்றடிக்க அதை எதிர்த்து இயங்கும் கமலும் அமலாவும், வெளிப்புறமாக விரிந்துகொள்ளும் குடையும், அதைத் துரத்திக் கொண்டு ஓடுவதும், மிக மிக அருமையான கவிதைக் காட்சிகள். அழகுணர்ச்சி அள்ளிக்கொண்டு போகும் பாடல் இது.

//ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்
//

ஆகிய சரணங்களின் முடிவு வரிகளில் வயலின்களின் அபார ஓட்டத்தைக் கேட்டுப் பாருங்கள். ராஜா ராஜாதான் என்று பெருமை கொள்ள வைக்கும் இசை. பாலுவும் சித்ராவும் இனிதாகப் பாடியிருக்கும் இனிய பாடல் – இதோ!

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்

(பூங்காற்று)

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்

(பூங்காற்று)வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணில் இன்று பன்னீர் தூவும்

March 23, 2006

நான் சிகப்பு மனிதனில் பாலு பாடியிருக்கும் இன்னொரு அருமையான மென்மையான உணர்வுப் பூர்வமான பாடல் இது. பெண்மானே-யில் இருக்கும் காதல் ததும்பும் கவர்ச்சிக் குரல் இதில் இல்லை. ஆழமான குரலில் – அண்ணன் பாசத்துடன் பாடும் தொனியைக் குரலில் கொண்டுவந்துவிடுவது பாலுவுக்குக் கடவுள் தந்த வரம். இம்மாதிரிப் பாடலை அவர் பாடுவதைக் கேட்பதற்காகவே அவருக்குத் தங்கையாகப் பிறக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் பாடல். ரஜினியைப் பார்த்தாலே “அண்ணன்” என்ற உணர்வு எழச் செய்வதும் அவருக்குக் கடவுள் தந்த வரம். இல்லையா?

உறுத்தாத இனிய இசை.. கேட்டு மகிழுங்கள்.

வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணில் இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
விடிகாலை வெள்ளி மீனே
என் வாழ்வே உன்னால் தானே

கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்துத் தொங்கல் கட்டித் தந்தேனே

ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்
உன் கண்ணில் கண்ணீர் வந்தால் எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்

உன் கண்கள் இல்லாமல் என் கண்கள் பார்க்குமோ
உன் கால்கள் இல்லாமல் என் கால்கள் போகுமோ
என் வானம் இடிவதும் பகல் முடிவதும்
உன் பார்வையால்

கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்துத் தொங்கல் கட்டித் தந்தேனே

மன்னாதி மன்னன் எல்லாம் உன்னை வந்து பெண் பார்க்க
மையேந்தும் கண்ணே உந்தன் கண்ணோ மண் பார்க்க
கண்ணோரம் வெட்கம் வந்து நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட
காலாலே வண்ணக் கோலம் மண்ணில் நீ போட

செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே
சொன்னாலும் இனிக்குது நெஞ்சில் ஒலிக்குது
இன்ப ராகமே

வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணில் இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
விடிகாலை வெள்ளி மீனே
என் வாழ்வே உன்னால் தானே

கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்துத் தொங்கல் கட்டித் தந்தேனே


முதன் முதலாக காதல் டூயட்

March 22, 2006

ஜாலியா ஒரு பாட்டு கேட்கலாமா. காதல் என்றாலே அங்கே ஊடல் சகஜம் தானே. அப்புறம் காதலன் தான் கெஞ்சி கூத்தாடி பாட்டு பாடணும். அம்மணி எறங்கி வரவே மாட்டாங்க. இங்கே எஸ்.பி.பி படும் பாட்டை கேளுங்கள். எஸ்.ஜானகி வாங்கு வாங்குன்னு வாங்கறாங்க. இளையராஜாவின் கலக்கல் இசையில் (இப்படி சொல்லாம எப்படி பதிவு போடுறது :-)), ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் இருந்து ‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’. மனுசன் என்னமா பாடறார். கெஞ்சறார். அடடா. கலக்கல் தான் போங்க.

அதிலும் ரெண்டாவது சரணத்தில் ‘ஐய்யயோ! சும்மா தான் ஜாடை சொன்னேன்! கண்ணே கண்மணியே’ இதுல ‘ஐய்யயோ’ சும்மா ‘ஐயோ’ என்று இருக்குங்க. மனுசன் குரலிலேயே நடிக்கிறார். ரெண்டாவது Interlude-ல ‘எழிலா சிற்பமாக’ என்று கீச்சுக்குரல் வரும். அதுவும் பாலா தானே?.

ஆண்: “சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா”

பெண்: “ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே”

ஆண்: “முன் கோபம் தேவை தானா அன்பே ஆருயிரே’

பெண்: ‘அது யாரந்த பெண்’

ஆண்: ‘ஒரு நடிகையம்மா’

பெண்: ‘அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு’

– இப்படி போகுதுங்க பாட்டு. கேட்டு சந்தோசமா இருங்க..வரட்டா.

அன்புடன்,
சிவா