Archive for April, 2006

மலரே மெளனமா

April 27, 2006


தர்பாரி கானடா – என்றவுடன் பயமாகத்தான் இருந்தது. கர்ணா (1995) படத்தின் இந்தப் பாடல் அமைந்த ராகமாம் அது.

பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். வடக்கத்திய கஜல் போல இது தமிழ்க் கஜல் என்று யாரோ ஒரு பேட்டியில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. மீசையில்லாத அர்ஜுன், மீசையில்லாத ரஞ்சிதா பாடலுக்குத் தகுந்தாற் போலவே மென்மையான மெதுவான அசைவுகளுடன் நன்கு நடித்திருக்கும் பாடல்.

வித்யா(ச)சாகர் இசையில் மென்மையாக வீணையின் அதிர்வு போல கேட்கும் போது நம்மை ஊடுருவும் பாடல்.

பாலுவும் ஜானகியும் அலட்டிக் கொள்ளாமல் (எப்போது தான் அலட்டிக் கொண்டார்கள்!) பாடியிருக்கும் பாடல். அருவி மாதிரி ஆவேசமாக இல்லாமல் ஷவர் மாதிரி மென்மையாக பரபரப்பின்றிச் செல்லும் பாடல். பாடலின் தாளம் ரோஜா படத்தின் புது வெள்ளை மழை பாடலை நினைவு படுத்துகிறது. ஆனால் இதில் prelude, interlude என்று பாடல் முழுவதும் வித்யாசாகர் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதற்கு ஈடு கொடுத்து பாலுவும் ஜானகியும் “மெளனமா” “பேசுமா” “வேதமா” என்று முடியும் வரிகளையெல்லாம் குழைத்துக் குழைத்துப் பாடி நம்மை மேகங்களில் சஞ்சரிக்க வைத்திருக்கிறார்கள்.

“எனக்கு மிகவும் பிடித்த பாட்டு” என்று “கண்ணே கலைமானே”யை பாலு குறிப்பிட்டிருக்கிறார். ஜேசுதாஸ் “எனக்கு மிகவும் பிடித்த பாலுவின் பாட்டு” என்று குறிப்பிட்டுள்ளது இந்தப் பாடல் (தகவல்: www.spbala.com).

மிக இனிமையான பாடல்.

மலரே மெளனமா மெளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மெளனமா மெளனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேசம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா
விருந்தைப் பெறவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே (ஹ) மெளனமா
மலர்கள் பேசுமா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்று என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மெளனமா மெளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் அன்பே
மலரே மெளனமா மெளனமே வேதமா


Advertisements

முன் பனியா முதல் மழையா

April 26, 2006

-0-

பாலா இயக்கிய நந்தா படம் (2001) சூர்யாவுக்கு நல்ல திருப்புமுனையைத் தந்த படம். தந்தையைக் கொன்றுவிட்டுச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு வாய்பேசமுடியாத காது கேளாத தாயையும் சகோதரியையும் பிரிந்திருந்து, திரும்ப வந்து லைலாவைச் சந்தித்துக் கடைசிக் காட்சியில் தாய் கொடுக்கும் விஷம் கலந்த சோற்றை வாங்கித் தின்றுவிட்டு வாயோரம் ரத்தம் வழியச் செத்துப் போகிறார். அருமையான ஒளிப்பதிவும் காட்சியமைப்பும் சிரத்தையுடன் நடித்துள்ள நடிகர்களும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்தின.

துக்கங்கள், துன்பங்கள் நிறைந்த ரணமாகிப் போன வாழ்க்கைக்கிடையே தென்றல் வருடுவது போல வந்து ஆசுவாசப்படுத்துவது லைலா சூர்யா தொடர்பான காட்சிகள். இந்தப் பாடல் உண்மையிலேயே ஒரு மருந்து மாதிரி உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. சிநேகம் இருந்த மனங்களில் காதல் பூத்ததை வெளியே சொல்லாமல் இருவரும் தவிப்பை அடக்கிக்கொண்டு இருப்பதை சூர்யாவும் (உணர்ச்சியேயில்லாத இறுகிய முகம் ஒரு வசதி) லைலா(லூசுச் சிரிப்பு இல்லாமல் படம் முழுக்க அடக்கி வாசிக்க வேண்டிய கோபத்தை பிதாமகனில் பழி தீர்த்துக்கொண்டார்! அப்படியும் சரணத்திற்கு முன்பாக வரும் சுபா குழுவினரோடு பாடியிருக்கும் “மனசில் எதையோ” வரிகளில் சூர்யா பார்க்காத தருணத்தில் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை எடுத்துவிடுவார்!) இருவரும் நன்றாகச் செய்திருப்பார்கள். வசனங்களுக்குத் தேவையில்லாத காட்சியமைப்பு அற்புதமாக இருக்கும். பின்னணிப் பாடலாக வரும் இந்தப் பாடலே மனதில் ஓடும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் இதமாய் நம்மைத் தழுவும் புல்லாங்குழல் இடையிடையேயும் தனது இனிய இசையை வெளிப்படுத்தியிருக்கும்.

மிகமிக அடங்கிய மெல்லிய குரலில் பாடத் தொடங்கும் பாலு பின்பு அப்படியே உச்ச ஸ்தாயிக்குக் குரலைக் கொண்டு சென்று அட்டகாசமாகப் பாடியிருப்பார். பாடுவதற்கும் கடினமான பாடல். “விழுகிறதே” “நனைகிறதே” என்ற வார்த்தைகளை அவர் அலையலையாய் பாடியிருப்பது கடற்கரைக் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கிறது. பாலுவின் குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பாடல்.

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை… என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்… உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்….. நான் உன் மூச்சிலே…

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே….

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே….மங்கையரில் மகராணி

April 25, 2006


அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் பாலுவும் சுசீலாவும் பாடியிருக்கும் இந்த இனிய பாடலைக் கேளுங்கள். பாடல் எழுதியது கவியரசர். பாலுவின் குரல் படு இளமையாக அன்று இருந்ததையும் இன்று முதிர்ந்து மெருகேறி வைரம் பாய்ந்த மரம் போல கம்பீரமாக ஒலிப்பதையும் – கால இடைவெளியையும் – உணர முடிகிறது.

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி


கீரவானி இரவிலே கனவிலே பாட வா நீ

April 24, 2006


தனியிடமாகத் தேர்ந்தெடுங்கள். இரவுப் பொழுதாக இருத்தல் முக்கியம். முடிந்தவரை சந்தடியில்லாத இடமாக இருக்க வேண்டும். புழுக்கமான அறை வேண்டாம். திறந்த வெளியோ மொட்டைமாடியோ பரவாயில்லை. ஹெட்போன் இருந்தால் இன்னும் சிறப்பு. கண்களை மூடிக் கொள்ளுங்கள். உடலை விறைப்பாக இல்லாமல் தளர விடுங்கள். வரவு செலவு அன்றாட அலுவல் பிரச்சினை எதிரிகள் என்ற எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சில நிமிடங்களுக்கு விரட்டியடித்து விடுங்கள். நீங்கள் இருப்பது சுற்றிப் பசுமை, மரம் செடி கொடி புல்வெளி இருக்கும் சில்லிப்பு மிகுந்த இடம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதுக்குப் பிடித்தவரை நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடலை ஓட விடுங்கள்!

பாடும் பறவைகள் (1985) படத்தில் கார்த்திக்கும் பானுப்ரியாவும் கேமராவும் சுழன்றாட ராஜாவின் அற்புதமான இசையில் பாலுவும் ஜானகியும் நம்மை ஒரு சொர்க்கானுபாவத்திற்குள் கொண்டு செல்லும் இந்தப் பாடலைப் பற்றி நாள் முழுதும் சிலாகித்துப் பேசிக் கொண்டே இருக்கலாம். என்ன இசை! எவ்வளவு இனிதான குரல்கள்! என்ன பாவங்கள்! என்ன மாதிரியான பாடல் வரிகள்!

உதட்டசைவை பொருந்தாமலிருப்பதை வைத்து இந்தப் படத்தின் மூலம் தெலுங்காக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. வம்சி இயக்கிய தெலுங்கு மூலப் படத்தின் பெயர் அன்வேஷனா.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் பச்சைப் புல்வெளியில் காற்றைக் கிழித்துக்கொண்டு நாம் துவங்கம் ஓட்டத்தைப் போல ஆரம்ப இசை துவங்க, தலைக்கு மேலே விதவிதமான ஒலிகள் எழுப்பியபடி பறந்து செல்லும் பறவைகளைப் போலவும் மேகங்களைப் போலவும் முகத்தில் குளிர்ச்சியாக இறங்கும் மழைத்துளிகளைப் போலவும் இரு குரல்களில் பாலு ஆலாபனையைத் துவங்குகிறார். ஒரு குரல் ஸ்வரங்களைப் பாட, இன்னொரு குரல் சஞ்சரிக்கிறது. இரண்டும் ஒரு புள்ளியில் இசையோடு இணைந்து நிற்க நாம் லேசாக மூச்சு வாங்குகிறோம். பின்பு தேனினும் இனிய குரலில் “கீரவானி” என்று பாலு ஆரம்பிக்க, அதில் ஆயிரம் உணர்வுகள் பொங்கி வெள்ளமாகச் சீறுகின்றன. இசையும் குரலும் சடுகுடு விளையாடுகின்றன. பின்பு ஜானகி இணைந்து கொள்ள நம் செவிகளுக்கு இனிமையின் உச்சத்தினை இருவரும் காட்டுகிறார்கள்.

ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு வார்த்தையையும், சிற்பம் செதுக்குவது போல 100 சதவீத நேர்த்தியுடன் பாடியிருக்கிறார்கள் பாலுவும் ஜானகியும். அதிலும் அந்த இரண்டாவது சரணம்! ம்ம். எல்லாவற்றையும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது!

நாம் கேட்கையிலேயே மூடியிருக்கும் கண்களுக்குள் நீர் துளிர்க்கிறது. உடல் முழுவதும் ஒரு சில்லிப்பு ஊடுருவி, புல்லரிக்கச் செய்கிறது.

இந்தப் பாடலைக் கேட்பது ஒரு அற்புத அனுபவம். எவ்வளவு முறைக் கேட்டாலும் திகட்டாத, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதப் பாடல்.

ஸா நிஸரீ ஸா நீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பதஸா நிஸரீ
ஸநீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ

பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஸா நீ த ப ம க ரி ஸ நி

கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ

கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

கரிஸ பமக பாநி ஸரிகரிகஸ நீ பா

நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூப்பூத்தது பூங்கொடி

தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
ஒருவாய் பெறுவாய் மெதுவாய்

தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ

கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்

மலரில் மலராய் மலர்ந்தேன்

வரவுகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ

கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே


தேன் சிந்துதே வானம்

April 23, 2006


பொண்ணுக்குத் தங்க மனசு (1973-74) படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையமைப்பில் கவியரசரின் வரிகளில் பாலுவும் ஜானகியும் இந்த இனிய பாடலைப் பாடியிருக்கிறார்கள். விஜயகுமார் அறிமுகமான படம் என்று நினைக்கிறேன். இது இளையராஜா இசையமைத்துள்ளது என்று நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன். ராஜா அப்போது ஜி.கே.வி.யிடம் உதவியாளராக இருந்தாராம். இன்னொரு குறிப்பிடத்தக்க உதவியாளர் எல். வைத்யநாதன்! ஒரு வேளை இப்பாடலுக்கு ராஜா கிடார் வாசித்தாரோ என்னவோ. மூலம் கன்னடம்.

வானம் மட்டும் தேன் சிந்தவில்லை. இந்தப் பாடலும் நம் காதுகளில் தேனைச் சிந்துகிறது.

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

இதயக் கோவில் : நான் பாடும் மெளன ராகம்

April 21, 2006


இது தேவதாஸ் மோகன் பாடும் பாட்டு. அருமையான சில்-அவுட் காட்சிகள் நிறைய இருக்கும். ஆரம்ப வரிகளில் பாலுவின் குரல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சோகப் பாட்டு. அமைதியான இரவுகளிலும் கேட்கலாம்.

நான் பாடும் மெளன ராகம்
என் காதல் ராணி இன்னும்
நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


இதயக் கோவில் : வானுயர்ந்த சோலையிலே

April 21, 2006


மேல் ஸ்தாயியிலேயே முழுப்பாடலையும் பாடியிருக்கிறார் பாலு. ஒரு தடவை பாடிப் பார்த்ததில் தாடையிலிருந்து கழுத்து முழுவதும் வலி பின்னியெடுத்தது. “வேதனையைத் தூண்டுதடி” என்பதில் வ்வேதனையை என்று அழுகுரலில் அட்டகாசமாகப் பாடி மோகனின் நடிப்பை நிறைவு செய்திருப்பார் பாலு. அருமையான பாடல்.

அஆஅஆஅஆ அஆஅஆஅஆ

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை

தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து

பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டுப் பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டுப் பாடுகின்றேன்


வானுயர்ந்த சோலையிலே


இதய கோவில் : கூட்டத்திலே கோயில் புறா

April 20, 2006

பயங்கர குஷியுடன் இந்தப் பாடல் துள்ளல் நடை போட்டுக் காற்றினில் தென்றலாய் வந்து நம்மைத் தழுவும். இசையும் குரலும் போட்டி போட்டுக் கொண்டு கபடி ஆடும். இரண்டாம் சரணம் முடிந்ததும் பாலுவும் ராஜாவும் ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள் கேட்டுப் பாருங்கள். முதலில் “கூட்டத்திலே கோவில் புறா” என்று பாலு அழைத்து நிறுத்துவார். ஹெட்போனில் கேட்டுப் பாருங்கள். “யாரை இங்கு தேடுதம்மா” என்று சொல்வதற்கு முன்பு “கூட்டத்திலே கோவில் புறா” லேசாக எதிரொலிக்கும். சாதாரணமாகக் கேட்கும்போது இது கேட்காது.

அசந்து போக வைத்த பாட்டு. எளிமையான ஆனால் அருமையான காட்சியமைப்பு. கிராமத்து இரவுகளில் பாடல் கச்சேரியின் இனிமையையும் திறந்த வெளிக் குளுமையையும் எல்லாவிதத்திலும் கொண்டுவந்து ராஜா பாலு கூட்டணியோடு அசத்தியிருப்பார் மணிரத்னம் (அவரால் இந்த மாதிரி இன்னொரு படம் தர முடியுமா என்பது சந்தேகம். மனிதர் மாநில எல்லையைக் கடந்து எங்கோ சென்றுவிட்டார்!).

எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல். அம்மாவும் சரி, மனைவியும் சரி, குழந்தைகளும் சரி, அடிக்கடிப் பாடச் சொல்லிக் கேட்கும் பாட்டு. பாடினால் குரலுக்கும் நல்ல பயிற்சி தரும் பாட்டு.

காதல் வயப் பட்டிருந்த தருணங்களில் இந்தப் பாடலைக் கேட்ட போதெல்லாம் புத்துணர்ச்சியும், உற்சாகத்தையும் தந்து புல்லரிக்க வைத்து, விழியோரங்களில் ஈரம் படிய வைத்த பாட்டு. இப்போதும் அந்த உற்சாகம் என்னைப் பற்றிக் கொள்கிறது.

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

அ அ ஆ ஆ ஆ அ அ ஆ ஆ ஆ
லல்லலலா லல்லலலா பாஸநித நிதபா

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை என்னைத் தாலாட்டுது

பூங்குயிலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ………

பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவையுன்னை எண்ணிக் கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுவது என் மனமே

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

தத்தித் தகதாம் தளாங்கு தகதாம் தரிகிட தகதாம் தஜம் தஜம் தஜம் தஜம்

அ அ அ அ அ அ அ அ நிகத ஸரிக ஸகரிகப தா ஸா நீ த

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜா வனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே

கன்னிப் பெண்ணே நீயும் இல்லையென்றால் கான மழை வருமோ
தாமரைப் பூங் காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக் கொண்டேன் பொன் மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான் மழை போலிந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

ஸாகமபா தநிஸ நிஸக மா
கூட்டத்திலே கோவில்புறா
நிஸநிததா தந்நி தநிபா பாமக நிதப ஸாநித நிஸகமபா
கூட்டத்திலே கோவில்புறா
கமகமகஸ கமபமகஸ பாபநிநி ததஸாஸா நிநி காக பதநி ஸகம பா
கூட்டத்திலே கோவில்புறா

தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம்
தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா


இதய கோவில் : இதயம் ஒரு கோவில்

April 20, 2006

இது கொஞ்சம் தத்துவார்த்தமான ஆனால் மிக அருமையான பாடல். இளையராஜா ஒரு விசேஷமான மனநிலையில் இருந்திருப்பார் போல. அவ்வளவு அருமையான ட்யூன். மூன்று சரணங்கள். இரண்டாவதை இளையராஜாவுக்காகவே அமைந்தது போல இருக்கும். பாடகரின் வாழ்க்கையில் இசையமைப்பாளர் இல்லாமலா?

அ அ அ ஆ ஆ ஆ ஆ

இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல்
இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல் இதில்
வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல்

லலலலா லலலலா லலலலா லலலலா
லலலலா லலலலா லலலலா லலலலா

ஆத்ம ராகம் ஒன்றில்தான்
ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடி தான்
நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான்
என்றும் புதிது

இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல் இதில்
வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல்

காமம் தேடும் உலகிலே
கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதினில்
நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானால்
என் பாடலின் ஜீ…..வன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான்
எங்கே பிரிவது

இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது
காதல் என்னும் பாதையில்
சேரும் நேரம் வந்தது
மீதித் தூரம் பாதியே

பாதை ஒன்று ஆனபோது திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனையாண்டாளே

வாழ்க நீயும் வளமுடன்
என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல் இதில்
வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்


இதய கோவில் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

April 20, 2006மதுரை அழகப்பன் நகர் தாண்டி வரும் பைக்காராவிலிருந்து உள்ளே செல்லும் பாதையில் சென்றால் வயற்காடு வரும். அதனுள்ளே தள்ளி ஒதுங்கியிருந்தது சரவணா டூரிங் தியேட்டர். அங்கே தான் நானும் என் நண்பர்களும் சேர்ந்து இரண்டாம் ஆட்டத்திற்குப் போய் இதய கோவில் படம் பார்த்தோம். சரவணாவில் ஒரு வசதி – கம்புகள் ஊன்றி கூரை பிரமிடைக் கவிழ்த்து வைத்திருந்ததால் சுவர்களின்றி காற்றோட்டமாக இருக்கும். சுற்றி கட்டிடங்கள் எதுவும் இல்லாததால் ஜில்லென்ற காற்றுக்குப் பஞ்சமே இருக்காது. நான் பார்த்தது 1986-இல். இப்போது தியேட்டர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சுற்றி வீடுகள் முளைத்து கசகசவென்று ஆகியிருக்கும்.

இதய கோவில் படம் பார்த்தது ஒரு அற்புத அனுபவம். சரவணாவில் பெரிய ஸ்பீக்கர் பெட்டிகளை ஒவ்வொரு கம்பிலும் கட்டியிருந்ததால் ஒலி துல்லியமாகக் கேட்டது. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் மகா இனிமைமயான பாடல்கள். இசை மழையில நனைந்த ஆனந்த அனுபவத்தைத் தந்தது. மணிரத்னத்தின் படங்களில் இது எளிய படம். இளையராஜாவின் ராஜாங்கத்தில் பாலுவின் இனிய குரலில் மோகனின் நல்ல நடிப்பில் நல்ல திரைக்கதையுடன் நன்றாக அமைந்த படம். சோக மோகனின் ஒட்டுத்தாடி தேவதாஸ் கெட்டப் ஒன்றுதான் பொருந்தாத உறுத்தல். துணை நடிகர்களனைவருமே நன்றாக நடித்திருக்கும் படம்.

இதயம் ஒரு கோவில் பாடலை பாலு தனிப் பாடலாகப் பாடியிருந்தாலும், அதையே இன்னொரு முறை ராஜாவும் பாடி அதில் மட்டும் ஜானகியும் குரல் கொடுத்திருப்பார். மற்றபடி பெண் குரலில் வேறு பாடல்களே இல்லாத படம்! 🙂

இது சிறந்தது, அது சிறந்தது என்று வரிசைப்படுத்த முடியாதபடி எல்லாப் பாடல்களும் மிகவும் அருமையான பாடல்கள். எல்லாம் நல்ல பாடல்களாக இருந்தாலும் இந்தப் பாடல் குறிப்பாக எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாடகராக ஆசைப்பட்டு வீராணம் குழாயில் வாழ்க்கை நடத்தும் மோகன் பாடிக் கொண்டிருப்பதை காரில் செல்லும் ராஜா கண்ணாடியை இறக்கிப் பார்த்து கேட்டு, பாட வாய்ப்பளிக்க, வாழ்நாள் ஆசை நிறைவேறக் கிடைத்த முதல் வாய்ப்பில் நல்லபடியாகச் செய்ய வேண்டுமே என்ற பரபரப்புடனும், பதற்றத்துடனும், ஆவலுடனும் – என்று பலவித உணர்வுகள் கலந்த மனோநிலையில் பாடகர் அறையில் மைக் முன்பு நின்று தொடங்கும் மோகன் காதலி அம்பிகாவின் கொலுசு கீழே விழ அதை எடுக்க முயல்கையில் சட்டைப் பையில் டீக்கடைப் பையன் வைத்த அம்பிகா சென்னைக்கு வருவதாகத் தகவலடங்கிய கடிதத்ததைக் கண்டு, தவிப்புடன் இருதலைக் கொள்ளி எறும்பாக அவஸ்தைப் பட, இங்கு கிராமத்திலிருந்து தனியாக மஞ்சள் பையுடன் மோகனைத் தேடி வந்திறங்கும் அம்பிகாவை ரவுடிகள் துரத்த அவர் கோவிலுக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டு மானத்தைக் காக்க தற்கொலை செய்து கொள்வார்.

பரபரப்பாக மட்டுமல்லாது உணர்வுப் பூர்வமாக இந்தக் காட்சியை அமைத்திருப்பார் மணிரத்னம். இசையிலேயே அவற்றை அட்டகாசமாகக் கொண்டுவந்திருப்பார் ராஜா. பாலு? கேட்கவே வேண்டாம். உருகி உருகி பாடியிருப்பார். மோகன் மிக நன்றாக நடித்திருப்பார். ஆக அனைத்து விதங்களிலும் அருமையாக அமைந்த பாடல் என்பதால் இதை முதலில் பதிவு செய்கிறேன்.

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னைத் தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்

காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று

ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போராடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

வான் மேகம் மோதும் மழைதனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே

ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்

ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையைத் தாண்டுமோ
நியாயங்கள் வாய் மூடுமோ
தெய்வமில்லை என்று போகுமோ

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ

ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ