Archive for July, 2006

கிழக்கு வாசல் # 2 – தளுக்கித் தளுக்கி வந்து

July 28, 2006

Image and video hosting by TinyPic
குஷ்பு தாவணி போட்டு நடித்த படங்களில் சின்னத் தம்பி, வருஷம் 16, கிழக்கு வாசல் ஆகியவற்றை மறக்கவே முடியாது.

கிழக்கு வாசலிலும் கார்த்திக்கைச் சீண்டிக்கொண்டே இருக்க, கார்த்திக்கும் அவரைச் சீண்டும் காட்சிகளெல்லாம் இளமையானவை. கிராமத்துச் சீண்டல்களே தனிதான்!

கார்த்திக்கின் குறும்பு நடிப்பிற்குச் சரியான தீனி போட்ட பாடல்களில் எனக்குப் பிடித்தது கோபுர வாசலிலே படத்தில் வரும் கேளடி என் பாவையே பாடல். படமாக்கமும், நடிப்பும், இசையும் என்று எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அசத்திய பாடல் அது. அது நகரத்துக் குறும்பு என்றால் கிழக்கு வாசலின் இந்தப் பாடல் கிராமத்துக் குறும்பு. பாடல் வரிகளைப் போலவே பாலுவின் குரலும் தளுக்கித் தளுக்கி, குலுக்கிக் குலுக்கி (இரட்டைக் கிளவியல்ல – அடுக்குத் தொடர்) கிராமத்தின் வாய்க்கால் வரப்புகளில் குதி்த்துக் குதித்து ஓடி வருகிறது இந்தப் பாடலில்.

பாடலில் நடுவே ‘தளுக்கித் தளுக்கித்தான்’ என்று இழுத்து நிறுத்த டுமுடுமுடுமுடுமு என்று வரும் ஒரு இசைக் கொத்திற்கு குஷ்புவின் இடையைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்குவார் கார்த்திக். தியேட்டரில் விசில்கள் பாடல் முடியும் வரை பறந்தன.

ஜாலியான பாடல்.

தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம்
வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால

இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே அடி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம்
வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால

மஞ்ச வாத்து நடையப் பார்த்து
நெஞ்சோரம் இன்னேரம் நோயாச்சு ஹா
கொஞ்ச வார புளியங்காத்து
இஞ்சாறு அஞ்சாறு நாளாச்சு
கரும்பு கரும்புதான் – கடிக்குதே
எறும்பு எறும்புதான் – வயசுல
அரும்பு அரும்புதான் – மனசுல
துரும்பு துரும்புதான் – அழகுல
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி

சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம்
வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால

இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம்
வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலேய் யா..

பண்ண மாடு காளையப் பாத்து
திண்டாடித் திண்டாடி ஓடாதா ஹோய்
தின்ன சோறு ஜீரணமாக
வம்போடு தும்போடு வாராதா

மொறச்சு மொறச்சுதான் மயக்குது
வெறச்சு வெறச்சுதான் நடக்குது
வரப்பு வரப்புதான் வழுக்குது
தடுக்கி விழுந்துதான் தவிக்குது

பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு
பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு

சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித் தரிகிட
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம்
வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால

இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே அடி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை
தளுக்கித் தளுக்கித்தான்

தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம்
வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே

அட
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம்
வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே

***

கிழக்கு வாசல் # 1 – பச்ச மலைப் பூவு

July 28, 2006

Image and video hosting by TinyPic
எனக்கு மென்மையான பாடல்களென்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் பாலு பாடிய மெலடிப் பாடல்கள் என்றால் எனக்கு உயிர் (பட்டியலெல்லாம் போடமாட்டேன். போட்டால் இந்தப் பதிவு போதாது).

ஆர்.வி. உதயகுமாரின் கிழக்கு வாசல் (1990) தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சிறப்பாக ஓடி பெருமை பெற்றது. நல்ல திரைக்கதையமைப்பும் நடிகர்களின் சிறந்த நடிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக கிராமத்துக் கதைக்கு உயிர் கொடுத்த இசைஞானியின் இசையும் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்தின என்று சொல்லலாம்.

ரேவதியின் அமைதியான நடிப்பும் கார்த்திக்கின் குறும்புத்தனமான நடிப்பும் குஷ்புவின் அழகான நடிப்பும் மனோரமா, ஜனகராஜ், மற்ற துணை நடிகர்களின் சிறந்த நடிப்பும் படத்தில் பார்வையாளர்களை நன்றாகவே ஒன்றச் செய்தன. இறுதிக்காட்சியில் கார்த்திக் அருமையான நடிப்பைக் கொடுத்திருந்தாலும் அவரது குழறல் உச்சரிப்பைப் பிடித்துக்கொண்டு இன்றுவரை பலர் கேலி செய்து கொண்டுதானிருக்கின்றனர்.

பாடலுக்கு வெட்டியாக முகத்தை இறுக வைத்துக் கொண்டு உதட்டைப் பிரிக்கவே தயங்கித் தடுமாறும் நடிகர்களுக்கு மத்தியில் கார்த்திக் பாடல்களுக்கு எப்போதுமே மிகவும் இயல்பாக முகபாவங்களையும் உதட்டசைவையும் கொடுப்பதில் வல்லவர். கோபுர வாசலிலேயின் கேளடி என் பாவையே பாடல் ஒரு உதாரணம். அதே போல இந்தப் படத்திலும் பாடல்களுக்கு அற்புதமான வாயசைப்பையும் முகபாவங்களையும் கொடுத்திருப்பார் கார்த்திக்.

ஏனோ அவரது நடிப்புத் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதத்தில் நல்ல படங்களாக அமையவில்லை. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் கமல் பெயர் தட்டிக்கொண்டு போனது போல, மணிரத்னத்தின் மெளனராகத்தில் படம் முழுவதும் சிரிக்காமல் வரும் ரேவதி, மோகன் ஆகியோரை ஓரங்கட்டி சிலகாட்சிகளே வந்து எல்லாரது மனதையும் கொள்ளைகொண்டு போனார் கார்த்திக். ‘மிஸ்டர் சந்திரமெளலீ’யை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது. அதே போல அக்னிநட்சத்திரம் இரண்டாம் தாரத்தின் மகனாக வரும் பாத்திரத்தில் சமூகத்தின் முதலாம் தாரத்தின் குடும்பத்தின் அவமானங்களைப் பட்டு கொதிக்கும் காட்சிகளெல்லாம் நன்றாகச் செய்திருந்தார்.

கிழக்கு வாசல் படத்திலும் தனது துடுக்கான நடிப்பால் பல இடங்களில் நன்றாகச் செய்திருப்பார் கார்த்திக். கோவிலுக்குச் சாமி கும்பிட வரும் ரேவதியைப் பார்க்க பிரயத்தனம் செய்வது நல்ல காட்சி. அழகான அந்த முற்றம் இருக்கும் வீட்டில் மர ஊஞ்சலில் ரேவதி ஆட புன்னகை சிந்தும் முகத்துடன் அவர் பாடும் ‘பச்ச மலைப் பூவு’ எங்கள் வீட்டில் அனைவருக்கும் இன்னொரு ‘ராசாத்தி ஒன்ன’ பாடல்.

சீராக ஓடும் சிறிய நதி போல அழகான மெட்டில், இனிய இசையில், அருமையாகப் பாடியிருப்பார் பாலு. பாடல் வரிகளை எழுதியவர் ஆர்.வி.உதயகுமார்?

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி
சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட

மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் நேரம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக
பூநாத்து முகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக
சித்திரத்துச் சோலை முத்துமணி மாலை
மொத்தத்துல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

அழகே பொன்னு மணி
சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

புன்னகை இளவரசிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

July 27, 2006

Image and video hosting by TinyPic
“சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா?” என்று குயிலாகப் பாடி அறிமுகமாகி இன்று வரை எத்தனையோ இனிய பாடல்களை நமக்குக் கொடுத்திருக்கும் சின்னக்குயில் சித்ராவுக்கு இன்று பிறந்தநாள்.

இளையராஜாவின் இசையில் ஜானகி, பாலு, சித்ரா நூற்றுக்கணக்கான அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

சித்ராவும் ஹரீஷ் ராகவேந்திராவும் மஸ்கட்டில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்களைப் பார்த்திருக்கிறேன். சித்ராவைப் “புன்னகை இளவரசி” என்று தாராளமாகச் சொல்லலாம். எப்போதும் புன்னகை பூத்திருக்கும் அவர் முகத்தில்.

நீண்ட காலம் இதயத்தில் நிற்கும் இனிய கானங்களை நமக்கு வழங்கிய சின்னக் குயிலுக்கு மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

T.R. & Bala # 5 – நெஞ்சம் பாடும் புதிய ராகம்

July 27, 2006

Image and video hosting by TinyPic
ஒரு தலை ராகம் மாதிரி டி.ஆரின் இயக்கத்தில் வந்த இன்னொரு படம் நெஞ்சில் ஒரு ராகம் (1982). இதில் தியாகராஜனும் சரிதாவும் நடித்திருந்தனர். படத்தைப் பார்த்ததாக நினைவில்லை. தியாகராஜன் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் இரண்டே படங்களில் முதன்மையானது ‘மலையூர் மம்பட்டியான்”. இரண்டாவது பானுசந்தரோடு நடித்திருக்கும் “நீங்கள் கேட்டவை” – அதில் ‘பிள்ளை நிலா’ பாடலை மேடையில் பாடும்போது அவரது முகம் திரை பூராவும் தெரியும் – கொஞ்சமும் உணர்ச்சியே இல்லாமல்!

நெஞ்சில் ஒரு ராகம் படத்தில் சில பாடல்கள். பாலு ‘முந்தானை சேலை திண்டாடுதே’ என்று ஒரு ஜாலியான பாடலைப் பாடியிருக்கிறார். அது தவிர “மேகம் தான் இதில் மழையே இல்லை” என்று ஒரு நல்ல மெலடியையும் பாடியிருக்கிறார். நிறைய மெலடி பாடல்கள் போட்டாகிவிட்டது. ஒரு பாடலுக்கு…சே…மாறுதலுக்கு வேகப்பாடல் ஒன்றைப் பதியலாம் என்று தோன்றியது. அதனால் இந்தப் பாடல். அதாவது நம் நெஞ்சம் பாடும் பாடல்! 🙂 ஜானகியும் பாலுவும் சேர்ந்து ரகளை செய்திருக்கும் பாடல் இது. அப்போதைய மெகா ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. வரிக்கு வரி ஜானகி அழகாகப் பாடிக்கொண்டே போக, போக்கிரி பாலு குரலில் வித்தை காட்டி கபடி விளையாடி எல்லாரையும் அவுட் ஆக்கியிருப்பார்.

லலலலலல தரரரராராரா
ரபபபா ரபரபபபபபபபப பா

நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

நீ எய்த பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே

நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே


உன் குரல் கேட்கவே
குயில் கூட்டங்கள்
தலை நிமிர்ந்தன
தனை மறந்தன

எந்தன் வானத்தில் தொழுகின்ற மின்னல்
சுழலும் கரமென்று சொன்னாலே தகுமே
எந்தன் வானத்தில் விழுகின்ற வார்த்தை
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே

மன மேடைக்குள் ஆராதனை
மலர் தூவாதோ என் கற்பனை
மன மேடைக்குள் ஆராதனை
மலர் தூவாதோ என் கற்பனை

ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே


நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எந்தன் பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ

ஏஏஏஏஏஏஏஏஏ ஏஹே
ஓஓஓஓஓஓஓ ஆஹா


லலலலா ரபபபபபபபபப
லலலலா ரபபபபபபபபப
பபபபபபப தாராதாரதாரதா

கடலோடு நதிக்கென்ன கோபம்

July 25, 2006

Image and video hosting by TinyPic
அர்த்தங்கள் ஆயிரம் (1981) சரியாகப் போகாத படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தமிழ்ப்படங்களின் விதிப்படி தோல்வியடைந்த படங்களில் முத்தாக ஏதாவது ஒரு பாடல் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது. சங்கர் கணேஷ் இசையில் பாலு பாடியிருக்கும் இந்த அற்புதமான பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும்.

சிக்கலான மெட்டை அனாயசமாகப் பாடுவதில் பாலுவை மிஞ்சமுடியாது என்று நிரூபிக்கும் பாடல்! மெதுவாகப் பல்லவியை முடித்துவிட்டு சரணத்தில் வேகமெடுக்கிறார். “குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு” என்பதைப் பாடும் போது அவரது குரலும் குலுங்குகிறது. அட்டகாசமான பாடல். ஆபோகி ராகத்தில் அமைந்த பாடலாம் இது.

எவ்வளவோ தேடியும் படத்தைப் பற்றிய எந்தவித விவரங்களும் கிடைக்கவில்லை! 😦

கடலோடு நதிக்கென்ன கோபம் – காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவை

கடலோடு நதிக்கென்ன கோபம் – காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

நீலவான மேகம் போலக் காதல் வானில்
தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம்
மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
நீலவான மேகம் போலக் காதல் வானில்
தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம்
மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

வனமோகினி வனிதாமணி புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்

கடலோடு நதிக்கென்ன கோபம் – காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவை

கடலோடு நதிக்கென்ன கோபம் – காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு -ஆஆஆஆ
குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிட வா அலையெனவே
தழுவிட வா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே

கடலோடு நதிக்கென்ன கோபம் – காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

மோக வீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னைச் சூடிடவா
தோகை நீயே மேடை நானே
மதன் வீசிடும் கணை பாயுது
மலர் மேனியும் கொதிப்பாகுது
குளிர் ஓடை நீயே வா வா

கடலோடு நதிக்கென்ன கோபம் – காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவை

கடலோடு நதிக்கென்ன கோபம் – காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

பாடும் நிலாவின் அமெரிக்க/கனடிய பயண அட்டவணை!

July 22, 2006

Image and video hosting by TinyPic

பாலுவின் அடுத்த அமெரிக்க/கனடா பயண அட்டவணை இதோ. பாஸ்டனிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சியுற்றிருக்கிறேன். இதுவரை அவரது நிகழ்ச்சி எதையும் நேரில் பார்த்ததில்லை. அவரை முதன்முறையாகப் பார்க்கமுடிவது பற்றிய நினைப்பே என்னுள் ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறது. இறைவன் அருளால் நிகழ்ச்சி எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெறட்டும்.
Image and video hosting by TinyPic

செப்.2 சனி – பால்டிமோர் (கன்னடம்)
செப்.3 ஞாயிறு – பால்டிமோர் (தமிழ், தெலுங்கு)
செப்.8 வெள்ளி – டெட்ராய்ட்
செப்.9 சனி – ஓர்லாண்டோ
செப்.10 ஞாயிறு – பாஸ்டன்
செப்.15 வெள்ளி – கொலம்பஸ் (உறுதி செய்யப்படவில்லை)
செப்.16 சனி – பீனிக்ஸ்
செப்.17 ஞாயிறு – வான்கூவர்
செப்.23 சனி – மினியபொலிஸ்
செப்.24 ஞாயிறு – சிகாகோ
செப்.29 வெள்ளி – ஹீஸ்டன்
செப்.30 சனி – ஸான் ஹோஸெ (தெலுங்கு)
அக்.1 ஞாயிறு – ஸான் ஹோஸெ (தமிழ்)
அக்.7 சனி – டொரண்டோ
அக்.8 ஞாயிறு – ஹார்ட்போர்ட், கனெக்டிகட்
அக்.9 திங்கள் – இந்திய பயணம்

அவரது இசைப் பயணங்கள் முடிவதில்லை!

நன்றி: http://groups.yahoo.com/group/spbfans

***

T.R. & Bala # 4 – வாசமில்லா மலரிது

July 21, 2006

Image and video hosting by TinyPic
ஒரு தலை ராகம் (1980) படத்தின் சங்கரும் அவருடைய பெல்பாட்டம் பேண்ட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. பெல்ஸ் அல்லது பெல்பாட்டத்தைப் போட்டுக் கொண்டு நடக்க முழங்காலுக்குக் கீழே இரண்டு விசிறிகளை மாட்டி வைத்தது போல நன்றாக காற்று வரும். தெருவை இலவசமாகக் கூட்டிச் சுத்தப் படுத்துகிறோம் என்று எங்களை வயசாளிகள் கிண்டல் செய்ததுண்டு. அதில் அரைவட்டத்திற்கு பாதி ஜிப்பை வைத்துத் தைப்பது இன்னும் கூடுதல் ஸ்டைல்!

பின்பு அகலம் குறைந்து நேராகிப் பின்பு டைட்ஸ் வந்து பின்பு பேகி என்ற பெயரில் – தொடைப் பகுதியில் காற்றோட்டமாக இருந்தது – மறுபடியும் விசிறிக் கொண்டு அலைந்து 1990-களில் ஒரு வழியாக அப்படியும் இப்படியும் இல்லாமல் நடு சென்டரில் செட்டிலாகி விட்டோம் என்று சந்தோஷமாக இருந்தால் இரண்டு வருடங்களாக மறுபடியும் கீழே அகலமாக பெல்பாட்டத்தின் பேரனைப் போல ஒன்றைப் போட்டுக்கொண்டு இளைஞர்களும் இளைஞிகளும் அலைகிறார்கள். எல்லாம் ஒரு சுழற்சி என்பதைக் அனுபவத்திலேயே பார்த்தாகிவிட்டது.

பயணங்கள் முடிவதில்லையின் “இளைய நிலா” பாடலைப் போல ஒரு தலை ராகத்தில் பெல்பாட்டம் சங்கர் மேடையைக் கூட்டிக் கொண்டு வந்து மைக்கைப் பிடித்துப் பாடும் இந்தப் பாடலும் இனிமையான கிடார் இசையுடன் மென்மையாக ஒலிக்கும்.

முதல் வரியைப் பாடிவிட்டு பாலு அனாயசமாக ஒரு சிரிப்பை உதிர்ப்பார் கேளுங்கள். இந்த மாதிரி சிரிப்பு ஒன்றுக்காக மட்டும் பாலுவின் பாடல்களைப் பைத்தியமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன் அப்போதெல்லாம். பாடலில் வரும் சிரிப்பு அவரது பிரத்யேக முத்திரை.

வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் – ஸ்பெஷல் # 14

July 18, 2006

Image and video hosting by TinyPic
ஜேசுதாஸ் பற்றி நிறைய விளக்கவேண்டியதில்லை. பாலுவால் அன்போடு “தாஸண்ணா” என்றழைக்கப் படுபவர். ஆரம்ப காலகட்டத்தில் இவரது தமிழ் உச்சரிப்பைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால் அவரது குரல்! யாரையும் வாயைத் திறக்கவிடாத, மெய்மறக்கச் செய்யும் தெய்வீகக் குரல். அவரது குரல் நம் நாடி நரம்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். கர்நாடக இசையில் தேர்ச்சியும், குரல் வளமும் அமைந்து, இசையை ஸ்வாஸம் போலப் பாவிக்கும் பாடகரிடமிருந்து நமக்கு எம்மாதிரியான இன்னிசை கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.
Image and video hosting by TinyPic
அவரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு கச்சேரியின் போது பார்த்திருக்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் அங்கேயும் அவரை சினிமா பாடல்களைப் பாடச் சொல்லி சீட்டனுப்பிக் கொண்டிருந்தது. அவர் பொறுமையுடன் அதற்கான மேடை அதுவல்ல என்று விளக்கி பாட இயலாததற்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார். அதனாலேயே கூட்டம் குபீர் குபீர் என்று காலியாகிக் கொண்டிருந்தது வருத்தம். எதிலுமே தவிர்க்க இயலாத சங்கதியாக சினிமா! 😦
Image and video hosting by TinyPic
ஜேசுதாஸ் என்றாலே எத்தனையோ அற்புதமான பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. இந்தப் பதிவில் பட்டியல் போட்டு மாளாது. மலைப் பாதையில் சரத்பாபு திறந்த ஜீப்பை ஓட்டிக் கொண்டே பாடும் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ என் மீது இன்றும் மோதிக்கொண்டு இருக்கும் தென்றல் போன்ற பாடல். ‘தெய்வம் தந்த வீடு’, ‘மனைவி அமைவதெல்லாம்’ ‘உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்’ என்று எத்தனையோ பாடல்கள்.

‘பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் இன்பம் வாராய்’ ‘என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது’ போன்று இதயத்தை உருக்கும் பாடல்கள்! ‘ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?

‘சிந்து பைரவி’ படத்தில் டைட்டில் காட்சியின் மஹா கணபதியிலிருந்து இறுதியில் வரும் கலைவாணியே வரை பெரிய ராஜாங்கமே நடத்தியிருப்பார் அவர். இசைஞானியும் ஜேசுதாஸ் அவர்களும் சேர்ந்து நமக்கு ஏராளமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். 70-களிலிருந்து 2000-வரை வரை அவர் கலக்கு கலக்கு என்று கலக்கிய பாடல்கள் எத்தனையோ. ‘தளபதி’ பாடல் தொகுப்பில் இருந்த ‘புத்தம் புது பூப் பூத்ததோ’ என்ற பாடல் என்னை பல நாள்கள் பைத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது -ஏன் இப்போது கேட்கையிலும் பைத்தியமாக அடிக்கிறது. ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?’ என்ற கலைஞன் படப் பாடல் ஒரு அழகான வாழ்த்து அட்டை போன்றது. சொல்லத் துடிக்குது மனசு படத்தின் பூவே செம்பூவே பாடலை மறக்க முடியுமா? இது முடிவில்லாத ஒரு பட்டியல்.

ஜேசுதாஸ் என்றாலே நொடி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நினைவில் துள்ளிக் குதித்து வரும் பாடல் மூன்றாம் பிறை படத்தின் ‘கண்ணே கலைமானே’ பாடல். வீட்டில் பாடிக் கொண்டிருக்கும் என் போன்ற இளைஞர்கள் (சரீ..சரீ.. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!) தவறாது பாடிப் பார்க்கும் பாடல் இது. அற்புதமான பாடல். இரவு நேரத்தில் கேட்பதற்கென்றே இருக்கும் வெகு சில உன்னத பாடல்களில் இப்பாடலும் ஒன்று. எவ்வளவோ இரவுகளில் என் குழந்தைகளைத் தூங்கச் செய்வதற்கு இப்பாடல் உதவியிருக்கிறது. என் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்த பாடல். ஜெயச்சந்திரன் என்றாலே ‘ராசாத்தி ஒன்ன’ போல, ஜேசுதாஸ் என்றாலே அவர்களுக்கு ‘கண்ணே கலைமானே’ பாடல்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது வழக்கு. இங்கு ஒரு மாறுதலுக்கு ஜேசுதாஸ் எட்டடி பாய்ந்த இந்த அற்புதப் பாடலை, அவரின் தம்பி, தங்கக் கம்பி எப்படிப் பதினாறடி பாய்ந்து பாடுகிறார் என்று கேட்போமா? 🙂

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் – ஸ்பெஷல் # 13

July 11, 2006

Image and video hosting by TinyPic

பொதுவாகவே “பாவாடை” “லவுக்கை” என்ற வார்த்தைகள் காதில் விழுந்தாலே பள்ளிக்கூடப் பையன்களாகிய எங்களுக்கெல்லாம் கன்னம் சிவந்துவிடும். சினிமாவின் நடுவே க்ளோசப்பில் நாயகனும் நாயகியும் (அவ்வளவு க்ளோசப்பில் பார்த்தால் முகம் எல்லாம் மங்கலாகத் தெரியாது?) பெருமூச்சு விட்டுக்கொண்டே பேசிக்கொள்ளும் காட்சிகளிலும், ஜெயமாலினி நடனம் வரும்போதும் என் நண்பன் அம்பி கைகளால் கண்களை மூடிக் கொள்வான் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

எங்கே நாயகியின் உதட்டில் நாயகன் முத்தமிட்டுவிடுவாரோ என்று பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் கடைசி மைக்ரோ வினாடியில் நாயகி சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொள்ள (‘நாத்தம் தாங்க முடியலை போலடா’), நாயகன் நாயகியின் காதில் மூச்சு விடுவார். இல்லாவிட்டால் முப்பரிமாணப் படம் போல சட்டென்று இரண்டு பூக்கள் ஒன்றையொன்று ஒட்டி நாயகன் நாயகியை மறைத்துவிடும். பூக்கள் விலகியதும் நாயகன் வாயைத் துடைத்துக் கொண்டே மந்தஹாஸப் புன்னகையை உதிர்க்க, நாயகி முகத்தை மூடிக்கொண்டு ஓடுவார்!

“பாவாடை தாவணியில் பார்த்த உருவமா” என்ற இந்தப் பாடல் “டிராயர் போட்ட உருவத்திலிருந்த” என் போன்ற 10 வயது பையன்களுக்கு “அடல்ட்ஸ் ஒன்லி” வகையறாவாகத்தான் அந்தக் காலகட்டத்தில் தோன்றியது. ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் என்பதும் இந்த வகைப் பாடல்தான். ஆனாலும் எங்கள் தெரு மீசை முளைத்த பையன்களெல்லாம் தாவணிப் பெண்கள் தண்ணீர் குடத்துடன் கடந்து செல்லும்போது ‘எதேச்சையாக’ இப்பாடல்களைப் பாட, பரிசாக ஓரக்கண் பார்வையும் களுக் சிரிப்புகளும் சில நேரம் கிடைத்திருக்கின்றன. நாங்கள் இதை முணுமுணுத்தாலே முதுகில் டின் கட்டிவிடுவார்கள் என்பதால் இப்பாடல்களை மூச்சு கூட விட்டதில்லை.

முத்தாலம்மன் சாவடியில் வீனஸ் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெறும்போதெல்லாம் இது போன்ற பாடல்களை (‘எலந்தப் பழம்’ பாடல் அந்தக் காலத்திய ‘மன்மத ராசா’) அறிவித்ததும் விசில் சத்தம் காதைப் பிளக்கும். ஏதோ விவகாரமான பாடல் என்ற அளவில் புரிந்து கொண்டதோடு சரி. ‘வரிகளுக்கிடையே’ எதையும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அப்போது விவரம் போதவில்லை! 🙂

டிஎம்எஸ் அவர்கள் பாடியுள்ள பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா பாடலை பாலு அவரது பாணியில் பாடியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் – ஸ்பெஷல் # 12

July 11, 2006

Image and video hosting by TinyPic
1990-இல் கல்லூரி படித்து முடித்த அடுத்த வாரத்திலேயே வேலைக்குச் சேர்ந்தாகிவிட்டது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமிருந்தும் வசதியில்லாதிருந்தது முக்கிய காரணம். ஆனாலும் அப்படி உடனே வேலைக்குச் சேர்ந்ததற்காக ஒரு முறையும் வருத்தப் பட்டதில்லை. ரூ.250 சம்பளம் கொடுக்கப்பட்டபோது கூட ‘பட்டதாரிக்கு இம்புட்டுத்தானா?’ என்று நொடியளவுகூட யோசிக்கவில்லை. ஏனென்றால் ஒன்றுமில்லாததற்கு ரூ.250 பெரிய விஷயமாகத்தான் தெரிந்தது.

வேலை செய்யத் துவங்கி ஆறு மாதம் கழித்து டேப் ரிகார்டர் ஒன்று வாங்க வேண்டும் என்ற சிறுவயது முதல் இருந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைந்து கடைகடையாக ஏறி இறங்கி கடைசியில் கைக்கடக்கமாக ஒரு BPL ஸ்டீரியோ டேப் ரிகார்டரை வாங்கிக்கொண்டு வந்தேன். ரூ.400 யோ என்னவோ அதன் விலை. டூ-இன்-ஒன் அல்ல. ரேடியோ கிடையாது, டேப் ரிகார்டர் மட்டும். தலைப்பக்கத்தில் ஸ்கேல் வைத்து இடவலமாகத் திருப்பக்கூடிய சிகப்பு முள் வைத்த ரேடியோவுடன் கூடிய சற்றே உயரமான டூ-இன்-ஒன்-கள் இன்னும் 300 ரூபாய் கூடுதல் என்று சொன்னார்கள். வீட்டில் ஏற்கெனவே ஒரு ‘ட்ரான்ஸிஸ்டர்’ என்று தாத்தாவும் அப்பாவும் அழைத்த வஸ்து ஒன்று மதுரை, திருச்சி, திருநெல்வேலி வானொலி நிலையங்களை எப்போதும் ஒலி பரப்பிக் கொண்டிருந்ததால் டூ-இன்-ஒன் வாங்கத் தோன்றவில்லை. விலையும் கட்டுப்படியாகவில்லை. இரவு பத்து மணியளவில் (ஒரு நிமிடத்திற்கு மின்சாரம் போய் வரும் – “லைன் மாத்தறான்”) என்று நினைக்கிறேன் சரோஜ் நாராயண் ஸ்வாமியின் செய்திகளைக் கேட்காமல் அந்த வஸ்து ஓய்ந்ததே இல்லை!

டேப் ரிகார்டரை வாங்கிக் கொண்டு அப்படியே அன்றைய மதுரை ‘மொபசல் பஸ் ஸ்டாண்டு’க்கு முன்பிருந்த கீஷ்டு கானம் கடைக்குச் சென்று வாங்கிய கேஸட் அப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த “சின்னத் தம்பி” கேஸட். பிறகு பொடிநடையாக பர்மா பஜாருக்குச் சென்று ஒரு காலி ஸோனி C-60 கேஸட் ஒன்றையும் வாங்கிக் கொண்டு பெரியார் பாலம் கீழ் தண்டவாளத்தைக் கடந்து சுப்ரமணியபுரத்திற்கு வருகையில் வழியில் இருக்கும் நண்பனின் புரோட்டா கடையில் முட்டை புரோட்டாவையும் இரண்டு ஆப்பாயில்களையும் தின்றுவிட்டு உலகத்தின் உச்சியில் நிற்கும் திருப்தியுடன் 10 மணிக்கு வீட்டை அடைந்தேன்.

அட்டைப் பெட்டியைப் பிரித்து பளபள டேப் ரிகார்டரை வெளியெடுத்து வைத்து அதற்கு அப்பா எதற்கோ பல வருடங்களாக பீரோவில் உபயோகிக்காது பத்திரமாக வைத்திருந்த மஞ்சள் நிற வெல்வெட் துண்டு ஒன்றை எடுத்துப் போர்த்தினேன். பின்பு கவனமாகச் சின்னத் தம்பியை உள்ளே போட்டு Play பட்டனுக்கு வலிக்குமோ என்று அமுக்க, சில வினாடி மெளனத்திற்குப் பிறகு சட்டென்று எழுந்த குலவைச் சத்தத்தில் அம்மா தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டார். அப்பாவும் தூக்கம் கலைந்து “என்ன சத்தம்?” என்றார். எல்லா மத்தியதரக் குடும்ப அப்பாக்களைப் போலவே அவரும் எங்களுக்குச் சிறுவயது முதல் “சினிமா வேண்டாம். படி படி” என்று அறிவுறுத்திக்கொண்டு இருந்தார் – நாங்கள் வேலைக்குச் சேரும் வரை. படிக்கும் காலத்தில் டேப்ரிகார்டர் போன்ற சாதனங்கள் வாங்குவது பற்றிய யோசனைகளும் அவற்றைப் பற்றி அப்பாவிடம் பேசும் யோசனைகளும் எங்கள் சிந்தனைக்குள் அடங்காத out-of-syllabus விஷயங்கள்.

சம்பிரதாய விலை விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் டேப் ரிகார்டரையே பார்த்துக் கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நான் டேப் ரிகார்டரின் இரு ஓரங்களையும் மெதுவாகப் பிடித்துக்கொண்டு, கண்களை மூடி, தலையை அதன் முன் கவிழ்த்து “ஸ்டீரியோ எபெக்ட்” இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொண்டேன். அதற்குள் பாலு ‘அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமத்தை’ ஆரம்பித்துப் போய்க் கொண்டிருந்தார்.
Image and video hosting by TinyPic

பிறகு ஸ்வர்ணலதாவின் போவோமா ஊர்கோலம் முடிய, அப்பா என்னை “போதும்டா. மொத நாளே போட்டுத் தீத்துடாதே. நாளைக்குக் கேட்டுக்கோ” என, அம்மா அதை ஆமோதிப்பதற்குள் “ஓ… ஓஒஓ… ஓஒஓ…” என்ற ஆலாபனையுடன் “தூளியிலே ஆட வந்த” என்று பாடல் தொடங்கியதும் பாலு ஏன் குரலை மாற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தேன். என் அம்மாதான் சட்டென்று ‘இது SPB மாதிரி இல்லையேடா’ என்றார்.

கேஸட் பெட்டியில் அச்சிடப்பட்ட பாடல் விவரங்களைப் பார்த்தபோதுதான் அந்தப் பாடல் மனோ பாடியது என்று தெரிந்தது. எப்படி என் பெற்றோருக்கு “ராசாத்தி ஒன்ன” மூலம் ஜெயச்சந்திரன் பிடித்துப் போனாரோ அது போல “தூளியிலே” மூலம் மனோ பிடித்துப் போனார். என்னை அடிக்கடி அந்தப்பாடலைப் பாடச் சொல்லி என் அம்மா கேட்பார். இப்போதும் சில நாள்களில் என் குழந்தைகளைத் தூங்கச் செய்யும் இரவுப் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம்பெறும்.

பாலுவைப் போலவே பல பாடல்களைப் பாடியிருந்தாலும் மனோ எந்தவிதமான நகல் முயற்சிகளுமில்லாத பாடிய நல்ல பாடல்கள் பல உண்டு. நாயகனில் “நீ ஒரு காதல் சங்கீதம்”, ஈரமான ரோஜாவேயில் “அதோ மேக ஊர்வலம்”, எங்க ஊரு பாட்டுக்காரனில் “செண்பகமே செண்பகமே”, என்று பல அருமையான பாடல்களைக் குறிப்பிடலாம். ஆனாலும் மனோ என்றாலே எனக்குப் பிடித்தமானது இந்தத் “தூளியிலே” பாடல். அதை பாலுவின் குரலில் கேட்க முடிவது இரட்டிப்பு மகிழ்ச்சி!

அந்தக் காலி ஸோனி C-60 கேஸட்டை வைத்து நானும் என் அண்ணனும் மாற்றி மாற்றிப் பாடி அழித்துப் பாடி அழித்துப் பாடி அழித்துப் பாடி… அட போங்க ஸார். நானும் பெரிய SPB-யாக வந்திருக்க வேண்டியது – விதிவசத்தால் இப்போது பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறேன். 🙂 🙂

என்னதான் சொல்லுங்கள். அன்று அந்தச் சம்பளத்தில் சிறிய டேப்ரிகார்டர் வாங்கியபோது கிடைத்த திருப்தியும் மகிழ்ச்சியும் இன்று ஒரு 60GB Video iPod வாங்கும்போது கிடைத்ததா என்றால் கேள்விக்குறிதான்!