I’m feeling like crying ! EPP – 24th March 2007

24-மார்ச்-07 அன்று ஒளிபரப்பான என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காது அட்டகாசமாகப் பாடினார்கள். இவ்வாரம் நிகழ்ச்சித் தொடரின் பதினோராவது பாகம்.

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”

என்ற திருக்குறளுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார் பாலு.

“வீணை ராஜு” என்றழைக்கப்படும் 84 வயது இளைஞர் – 65 வருடங்களாக திரையிசைத் துறையில் பணிபுரிந்தவர் – நடுவராக வந்திருந்தார். அந்த வயதிலும் பாடல்களை பலவித உடலசைவுகள், முகபாவங்களுடன் அவர் ரசித்தது ரசிக்கும்படியாக இருந்தது.

பாலு அவரை அறிமுகப்படுத்தியபோது அப்போது வந்த பல படங்களின் பாடல்களில் வரும் விசில் குரலுக்குச் சொந்தக்காரர் அவர் என்று சொன்னதைக் கேட்க அதிசயமாக இருந்தது. அதோடு கொன்னக்கோல், வீணை, மேண்டலின், சந்தூர் போன்ற வாத்தியங்களையும் வாசிப்பதில் பண்டிதம் பெற்றவர் என்றும் சொன்னார்.

பலேபாண்டியா படத்தில் “நீயே உனக்கு என்று நிகரானவன்” பாடலில் எம்.ஆர்.ராதாவுக்கு கொன்னக்கோல் – ஜதி – சொல்லிப் பிரபலமானவராம் வீணை ராஜு அவர்கள். “நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்”, “நீரோடும் வைகையிலே” போன்ற பாடல்களில் வரும் விசில் சத்தத்தை ‘இசைத்தவர்’ இவர் என்றும் குறிப்பிட்டார் பாலு. நடுவரது இரு புதல்வர்களான லோகு, சீனு இருவரும் திரையிசைத் துறையில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

முதலாவதாகப் பாட வந்தவர் தில்லியிலிருந்து வந்திருந்த கொங்கணி மொழி பேசும் ஆஷா. ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு நல்ல உச்சரிப்புடன் தமிழ்ப் பாட்டைப் பாடியது சிறப்பு. அவர் பாடியது கவியரசர் எழுதிய மெல்லிசை மன்னர் இசையமைத்து சுசீலாம்மா பாடிய சொன்னது நீதானா பாடலை.

அவரது தமிழ் உச்சரிப்பைப் பாராட்டிய பாலுவின் மறுமொழி இங்கே. மனோபாலாவும் குறிப்பாக பாடலின் காட்சியைப் படமாக்கிய விதத்தைக் குறிப்பிட்டுச் சிலாகித்தார்.

இரண்டாவதாக வந்தவர் காயத்ரி. இவர் பாடியது ‘கண்கள் இங்கே’ – கர்ணன் படத்திலிருந்து.

இந்தப் பாடலைப் பற்றிக் பாலு குறிப்பிட்டது.

அப்புறம் வந்தது கெளதம் மேனன் படத்தில் வரும் நீண்ட முடியுடைய வில்லன் போன்ற தோற்றத்துடன் – ஆனால் சன்னமாக மென்மையுடன் பாடிய பரத். இவர் பாடியது உயிரே படத்திலிருந்து உன்னிமேனன் பாடிய ரஹ்மானின் இசையில் வைர பூங்காற்றிலே உன் ஸ்வாசத்தை – பாடலை. நன்றாகப் பாடினார்.

நான்காவதாக வந்தவர் இறுதியாண்டு மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் டாக்டர் சத்தீஷ். அவர் பாடியது ஒவ்வொரு பாலு ரசிரும் என்றும் ரசிக்கும் பகலில் ஓர் இரவு படத்தின் ‘இளமையெனும் பூங்காற்று’ பாடலை. குரல் விசேஷமாக இல்லாவிட்டாலும் சன்னமாகப் பாடினார்.

இவரும் ‘பயனம்’ ‘கவணம்’ என்று உச்சரித்ததைச் சுட்டிக்காட்டினார். பாலு இந்தப் பாடலைப் பற்றிச் சிலாகித்துப் பேசியது இங்கே.

அவர் ‘தனியாக’ என்பதைத் ‘தணியாக’ என்று அழுத்தி உச்சரித்ததைச் சுட்டிக்காட்டிய பாலு மற்றபடி அவர் நன்றாகப் பாடியதையும் அவர் குரல் இந்தப் பாடலுக்குப் பொருந்தியிருப்பதையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

அடுத்து வந்த ராகினி அதிரடி கொடுத்த பிரமிப்பிலிருந்து விடுபடுவதற்கு நீண்ட நேரம் ஆனது. அவர் மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தின் ‘பேசுலாவுதே தேன் மலராலே’ என்ற அந்தப் பழைய பொக்கிஷத்தைப் பாடியதை நாள் முழுதும் கேட்கலாம் போல. கொசுறாகச் சொல்ல நினைத்தது அவரணிந்திருந்த அந்த அழகான ஆடையைப் பற்றி! 🙂 அந்தச் சில நிமிடங்களுக்கு ‘அந்தக் காலத்திற்கே’ நம்மைக் கொண்டு சென்றார் அவர்.

இந்தப் பாடலைப் பாடுவது அவ்வளவு எளிதல்ல. கஷ்டமான கமகங்கள் நிறைந்த ஆலாபனையை அழகாக எளிதாகப் பாடினார் ராகினி.

இந்தப் பாடலைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார் பாலு. அது இங்கே.

இறுதிப் போட்டியாளராக வந்தவர் மாலதி. முன்பே வா என்ற சில்லுன்னு ஒரு காதல் படப் பாடலைப்(கவிஞர் வாலி – ரஹ்மான் இசை) பாடினார். இதுவும் தலை எது கால் எது என்று புரியாத கடினமானப் பாடல் (பல்லவியும் சரணமும் இடைவெளியில்லாது வரும் மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தும் பாடல்!). படத்தில் பாடியிருப்பவர் அழகான ஸ்ரேயா கோஷல்.

தமிழ் தெரியாத பாடகிகளில் தமிழை ஓரளவுக்கு நன்றாக உச்சரிப்பது ஸ்ரேயா கோஷல் என்று குறிப்பிட்டார் பாலு. தனித்துவத்தால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இசையமைப்பாளர்கள் வரிசையில் ரஹ்மானும் குறிப்பிடத் தகுந்தவர் என்று சொன்னார் பாலு.

ரஹ்மானின் நல்ல குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்டே வந்தவர் ‘I’m feeling like crying’ என்றார். எனக்கு நிறைய சமயங்களில் இது நேர்ந்திருக்கிறது. “கேட்பாரற்றுத் தெருவில் கிடந்து ஐந்து லட்ச ரூபாயை ஆட்டோக்காரர் கண்டெடுத்து நேர்மையாகக் காவல்துறையுடன் ஒப்படைத்தார்’ என்றோ, ‘தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாகக் கொடுத்தார்’ என்பது போலவோ நல்ல செய்திகளைப் படிக்க, பார்க்க, கேட்க நேர்கையில் எனக்கு லேசாகக் கண்கள் கலங்குவதுண்டு. நல்லவர்களும் நல்லனவும் அபூர்வமாகிப் போய்விட்ட தற்கால சூழ்நிலையில் இம்மாதிரி நல்லவனற்றைக் கேட்கையில் மனம் நெகிழ்வதும் கண்கள் கலங்குவதும் – சரி விடுங்கள் – பதிவு திசை திரும்பிவிடும்.

நிகழ்ச்சியின் இறுதியில் பாலு எத்தனையோ இரவுகளில் என் குழந்தைகளைத் தூங்க வைத்த, இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ‘நிலவு தூங்கும் நேரம்’ பாடலைப் பாடினார் – இனிமையாக என்று தனியாக வேறு குறிப்பிட வேண்டுமா?

***

Leave a comment